DR. S.S. BADRINATH RECEIVES LIFE TIME ACHIEVEMENT AWARD BY AIOS
நேரடி வர்ணணை ராம்கி (கொச்சியிலிருந்து)
70வது அகில இந்திய கண் மருத்துவ கழகத்தின் (ALL INDIA OPHTHALMOLOGICAL SOCIETY) தேசிய மாநாடு இவ்வருடம் கொச்சியில் உள்ள லீ மெரிடியன் கன்வென்ஷன் சென்டரில் பிப்ரவரி 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை மிகச்சிறப்பாக நடந்தது. சுமார் 6000 கண் மருத்துவர்களும், மேலும் 2000ம் மேற்பட்டவர்களும் (மொத்தம் 8000 பேர்) இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
2.2.2012 அன்று மாலை நடந்த மாநாடு தொடக்க விழாவில், சென்னை சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது (LIFE TIME ACHIEVEMENT AWARD) வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அவர் இவ்விருதை பெறும் பொழுது அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். இவர் இன்றைய கண் மருத்துவர்களின் தந்தை என்று போற்றப்படுபவர். இந்நிகழ்ச்சிக்கு இவரது துணையாருடன் வந்திருந்தார். இவர் மேடை ஏறும் முன், இவரைப் பற்றி கண் மருத்துவரும், விஞ்ஞானக்குழு தலைவருமான டாக்டர் டி. ராமமூர்த்தி அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். அறிமுக உரை ஒரு சில நிமிடங்கள் நீண்டபோதும், டாக்டர் பத்ரிநாத் அவர்கள், கீழேயே அமைதியாக நின்றிருந்தார். பின் டாக்டர் லலித் வர்மா அவரை மேடைக்கு அழைத்துச்சென்றார்.
சிறப்பு விருந்தனராக கலந்து கொண்ட திரு. சஷி தரூர், டாக்டர் பத்ரிநாத் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து கைகுலுக்கினார். பின்னர் திரு. தரூர், டாக்டர் பத்ரிநாத் அவர்களுக்கு அகில இந்திய கண் மருத்துவ கழகத்தின் கௌரவ விருதான வாழ் நாள் சாதனையாளர் விருதினை வழங்கினார்.
மிகவும் எளிமையாக பழகும் பண்பு கொண்ட இவரை அம்மாநாட்டில் கண்டதும், பெரிய மற்றும் குட்டி கண் மருத்துவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இவரிடம் மாணவர்களாக கற்று, இன்று பெரிய மருத்துவமனையில் இருக்கும் அல்லது சிறப்பாக மருத்துவனை நடத்தும் பல கண் மருத்துவர்கள் இவரிடம் பேசி, போட்டோவும் எடுத்துக்கொண்டனர். பலர் இவர் கால் தொட்டு ஆசிர்வாதம் பெற்றனர். அவரை அம்மாநாட்டின் அமைப்பாளர் டாக்டர் கிரிதர் வரவேற்றார்.
விழா நிறைவு பெற்ற பின்பு, மற்றவர்கள் போல் பத்ரிநாத் வேகமாக வெளியே சென்றுவிட வில்லை. தன்னை சந்திக்க வருகின்ற அனைவரிடமும் ஒரு சில நிமிடங்கள் பேசிவிட்டு, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டோ எடுத்தக்கொள்ளவும் சம்மதித்தார். பல வெளிநாட்டு கண் மருத்துவர்கள் இவரை சந்தித்து மகிழ்ந்தனர்.
இவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்த பின்பும், இவர் அனைவருடனும் சகஜமாக பேசுவது,
எளிமையாக நடந்து கொள்வது போன்ற நற்குணங்கள் இவரை மேன்மேலும் உயர்ந்த மனிதாக ஆக்கிக்கொண்டே போகிறது. இந்தியர்களுக்கு, டாக்டர் பத்ரிநாத் ஒரு வரப்பிரசாதமாகும்.
என்னைக்கண்டதும், ஒரு மகனை பார்த்த தந்தை போல், அன்போடு கட்டிக்கொண்டார். என் மனைவி மற்றும் மகன் பற்றி மறவாமல் அந்த இடத்திலேயே கையை பிடித்துக்கொண்டு விசாரித்தார். எனக்கு கொடுக்கப்பட்ட விருதை படித்துப்பார்த்து பாராட்டினார். நீங்க விருது வாங்கும் போது நான் நன்றாக கைதட்டினேன் என்று சொல்லி என்னை நெகிழவைத்தார். அவரது துணைவியார் அவர்களும் என்னை பாராட்டி வாழ்த்தினார்.
மேலும் இவர் கண் மருத்துவ உலகின் வருங்காலம் என்ற தலைப்பில் 15 நிமிடங்கள் அபாரமாக பேசினார்.
பலருக்கு இவரை வாழ்த்த வயதில்லை, இருப்பினும் கண்ணொளி வழங்குவதில் முதல்வராக திகழும் நம் கண் தந்தை டாக்டர் பத்ரிநாத் அவர்களை என்னுடன் சேர்ந்து வணங்க வாங்கோ...வாங்வோ.. வாருங்கோ...
மும்பையில் சந்தித்தபோது எடுத்த போட்டோவில் டாக்டர் பத்ரிநாத் அவர்களின் அரவணைப்பில் ராம்கி.
ராம்கி