Monday, November 28, 2011

DR. N.S. SUNDARAM அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’

DR. N.S. SUNDARAM அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது’



தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ சென்னையை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் என்.எஸ், சுந்தரம் MBBS, DO, MS., அவர்களுக்கு அண்மையில் ஆளுநர் ரோசய்யா அவர்களால் வழங்கப்பட்டது அவருக்கு வாழ்த்துச் சொல்லும் சமயத்தில், அவருடன் சில ஆண்டுகள் நெருங்கிப் பழகிய ராம்கி அவர்கள், தன்னுடைய அனுபவங்களை நம்மிடைய மனம் திறக்கிறார்:

டாக்டர் சுந்தரம் அவர்கள் ஜனவரி 26, 1929ல் பிறந்தவர். சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவ மனையில் superintendentஆக பதவி வகித்தவர். டாக்டர் பத்ரிநாத் போன்று, இன்றைய கண் மருத்துவர்களுக்கு இவரும் ஒரு முன்னோடி எனலாம். இவரை முதன் முதலில் எங்கு சந்தித்தேன் என்று யோசித்துப்பார்க்கிறேன். சுமார் 10 வருடங்களாக என் மரியாதைக்குரியவர் இவர். இவரது தந்தை நடராஜப்பிள்ளையும் கண் மருத்துவர். இவரது மகன் டாக்டர் நடராஜன் அவர்களும் உலகம் போற்றும் ரெட்டினா கண் மருத்தவர். டாக்டர் சுந்தரம் அவர்கள் நூற்றுக்கணக்கான கண் முகாம்களை பல தொண்டுநிறுவனங்களான அரிமா சங்கம், சாய் டிரஸ்ட், காஞ்சி டிரஸ்ட். VHERDS, NIVH மூலம் நடத்தி மக்களுக்கு சேவை செய்தவர். முகாம்களின் போது, கண் பாதுகாப்பு பற்றிய அருங்காட்சியம் ஏற்பாடு செய்வது இவரது தனிசிறப்பு. பணியில் இருக்கும்போது இவருக்கு பிடிக்காத ஒரு வார்த்தை ‘சிபாரிசு…..’ யாரிடமும் சிபாரிசுக்கு செல்லமாட்டார். ‘சொந்த முயற்சியால் ஒருவன் முன்னுக்கு வரவேண்டும்’ என்பார்.

இவருடன் பழகிய சிலமாதங்களின் ‘அப்பா’ என்று அன்போடு அழைக்க ஆரம்பித்தேன். சென்னையில் இவரது திநகர் இல்லத்தில் பல முறை சந்தித்துள்ளேன். அப்போதெல்லாம் இவரும் இவரது துணைவி திருமதி கமலா சுந்தரம் அவர்களும் ‘இரவு சாப்பிட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும்’ என்று அன்புகாட்டுவார்கள்.

என்னுடன் ஒரிரு கண் மருத்துவர்கள் மாநாட்டிற்கு சுந்தரம் அவர்கள் வந்துள்ளார். இவர் நினைத்தால் இவரது மகன் டாக்டர் நடராஜன் தங்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கலாம். அவ்வாறு செய்யாமல் ‘நான் ராம்கியுடன்,சாதாரண அறையில் தங்கிக்கொள்கிறேன்’ என சொல்லும் எளிமையானவர். ஒரு ரயில் நிலையத்தில் நான் அரைகால் டிராயருடன் இருந்ததைப்பார்த்து ‘இது என்ன வேஷம்?’ என்று கிண்டல் செய்தார்.

எனக்கு இவர் வழங்கிய அறிவுரைகள், தன்னுடன் பகிர்ந்த கொண்ட சொந்த மற்றும் பொது விஷயங்கள் ஏராளம் ஏராளம். எப்படி குடும்பத்தை வழிநடத்தவேண்டும், எப்படி எளிமையாக வாழவேண்டும் என்றெல்லாம் எனக்கு அடிக்கடி உதாரணத்துடன் எடுத்துரைப்பார். என்னுடன் அதிகம் பேசும் இவரைப்பார்த்து ‘ராம்கி சரியா இவர்கிட்டே நல்லா மாட்டிகிட்டாரு’ என்று சொல்பவர்களுக்கு, நான் எத்தனை நல்ல புத்திமதிகள் இவரிடம் இருந்து பெற்றேன் என்பது பலருக்கும் தெரியாது.

மும்மையில் நான் தங்கியிருந்து வீட்டிற்கு ஒருமுறை என்னுடன் பல தூரம் நடந்தே வந்துவிட்டார். நாங்கள் இருவரும் தனியாக இருக்கும் போது, மும்பையில் சாப்பிடச் செல்வோம். ராம்நாயக் இட்லி ஷாப்புக்கு சென்று சுடச்சுட இட்லி சாப்பிடுவோம். அடுத்து முறை மும்பைக்கு வந்தபோதும், அங்கேயே என்னை அழைத்துச்சென்றார்.

இவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத போது, அன்போடு கவனித்துக்கொண்டு வருகிறார். ஏதாவது ஜோக் அடித்துக்கொண்டு எந்த விஷயத்தையும் ரொம்ப சீரியசாக எடுத்துகொள்ளமாட்டார். ‘கவலைப்பட்டு என்ன லாபம் ராம்கி, எல்லாத்தையும் வாழ்க்கையிலே நாம் சந்தித்தே ஆகவேண்டும். யாரும் தப்பிக்கமுடியாது’ என்றவர். இந்த வயதிலும் தன் மனைவிக்கு அனைத்து உதவிகளையும் முகம் சுளிக்காமல் செய்வார். ஒரு முறை என்னிடம், ‘கமலாவிற்கு உடம்பு நன்றாக இருந்தபோது எங்களை எல்லாம் ரொம்ப நல்லா கவனிச்சுப்பா… இப்போ அவளாலே முடியாத போது, நான் அவளை கவனிச்சுக்கறேன். அப்படி செய்யறது எனக்கு ஒரு பிரதிபலன் செய்வதுபோல இருக்கு’ என்று தன் மனைவி மீது கொண்ட பாசத்தை என்னிடத்தில் வெளிப்படுத்தினார்.

தான் எழுதிய புத்தகம், தான் தயாரித்து நாடகம் போன்றவற்றை படிக்க மற்றும் கேட்கச்சொல்வார். ஒரு பையில் ஏராளமான பேப்பர்கள் இருக்கும். ஏதாவது தேவையென்றால் அந்த பையில் தேடி எடுத்துவிடுவார். தான் படித்த புத்தகத்தில் ஏதாவது நல்ல விஷயங்கள் இருந்தால், அதை மறவாமல் எனக்கு கோடிட்டுக்காட்டி படிக்கச்சொல்வார். பின் அதுபற்றி தன் வாழ்வில் நடந்த சம்பவத்தையும் சேர்த்துச் சொல்லிவிளக்குவார். ‘என்ன படிச்சது புரிஞ்சுதா, அல்லது நான் விளக்கட்டுமா’ என்று பலமுறை கேட்டு நமக்கு நன்கு மனதில் படும்வரை எளிதில் விடமாட்டார்.

பல இடங்களுக்கு நானும் இவரும் காரில் செல்வோம். அப்போதும் தன் மனம் திறந்து என்னுடன் பேசுவார். பழகிய ஓரிரு நாட்களிலேயே ஒருவரை சரியாக எடைபோடுவார். சரியான நேரத்தில் சர்க்கரை நோய்க்காக இன்சுலின் ஊசியை தானே ஏற்றிக்கொள்வார். மதிய நேரம் வீட்டிற்கு சாப்பிடச் செல்லும்போது ‘ராம்கி, வாங்க வீட்டிலே போய் சாப்பிடலாம்’ என்று அழைத்துசெல்வார். நான், இவர், இவரது துணைவியார், டாக்டர் நடராஜன் எல்லாம் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம். இவரது குடும்பத்தார் அனவைரும் என்னையும் ஒரு குடும்பநபராக பாவித்து அன்பு செலுத்துவாரகள். ஒருமுறை என் மனைவி கமலா அம்மாவிற்கு உணவு ஊட்டிய சம்பவம் என் கண் முன்னால் நிற்கிறது. நான் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது, ‘ராம்கி நாளைக்கும் வாங்க..சாப்பிட்டுவிட்டு போகலாம்’ என்று அம்மா என்னை பலமுறை அழைத்ததுண்டு. மும்பையில் இந்த தம்பதிகளை சந்திக்கும்போதெல்லாம் என் பெற்றோருடன் இருந்தது போன்ற உணர்வு ஏற்படும். இதை எழுதும்போது என் கண்கள் குளமாகிறது.

இந்த தம்பதிகளின் மும்பையில் நடந்த திருமணநாள், பிறந்த நாட்களில் நான் முன்வரிசையில் இருப்பேன். அச்சமயங்களில் டாக்டர் நடராஜன் இவர்களுக்கு பலவித பரிசுகளை அளித்து மகிழ்வார். இருவருமே தற்போது என்னுடன் போனில் பேசும்போது ‘எப்ப வரீங்க பாம்பேக்கு..வந்திடுங்க சீக்கிரம்’ என்பார்கள். ‘என் குடும்பநிலை காரணமாக நான் கோவையில் தங்கவேண்டியிருக்கிறது’ என்று என் நிலையை விளக்கியதும், ‘உங்க மகன் படிப்பை முடிந்ததும் இங்கே வந்து எங்களுடன் வேலைபண்ணுங்க’ என்று பாசத்தோடு அழைப்பார்கள். நீங்க வந்திடுங்க நாம எல்லோரும் சேர்ந்து நிறைய வேலை செய்யலாம் என்று ஊக்கம் அளிப்பார்.
மும்பையில் இருக்கும்போது நான் சென்னைக்கு செல்கிறேன் என்றால், ‘எங்க வீட்டுக்குப்போய் ஸ்வர்ணாவை பார்த்துவிட்டு வாங்க’ என்று சொல்வார்கள். செல்லவில்லை என்றால், ‘ஏன் பார்க்காம வந்திட்டீங்க, ராம்கி’ என்றும் மறவாமல் கேட்பார்கள்.
டாக்டர் சுந்தரம் அவர்கள் என்வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்திருந்து வாழ்த்தினார்கள். ‘நான் சர்வீஸிலே இருந்தபோது என்னால ஒரு வீட்டை சொந்தமா வாங்க முடியலே. ஆனா நீங்க சர்வீஸிலே இருக்கும்போது ஒரு சின்ன வீட்டை வாங்கீட்டீங்க…வாழ்த்துக்கள்’ என்றார்.

டாக்டர் நடராஜன் தன் வீட்டிலிருந்து போனில் பேசினால், உடனே தன் பெற்றோர்களிடம் போனைக்கொடுத்து ‘ராம்கி லைனில் இருக்கார், பேசுங்க’ என்று பேசவைத்து மகிழ்வார்கள்.
நான் 4 வருடங்களுக்கு முன் மும்பையிலிருந்து சென்னைக்கு கிளம்பியபோது, டாக்டர் சந்தரம் அவர்கள் நானும் அவரும் எடுத்துக்கொண்ட போட்டோவை ஒரு காபி கப்பில் பதிவு செய்து ‘என் சார்பாகவும் உனக்கு நினைவுபரிசு அளிக்கிறேன்’ என்று சொல்லி பரிசளித்தார்.

இவர் அரசாங்க வேலையில் இருந்தபோது, தன் சக ஊழியர்களிடம் எப்படி கடுமையாக, அதேசமயம் நேர்மையாக நடந்துகொண்டார் போன்றவற்றை என்னுடன் விவரமாக பகிர்ந்து கொண்டார். கலைஞர் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் அவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஒரு முறை எம்ஜிஆர் அவர்களை சந்தித்தபோது, ‘எல்லா படங்களிளும் நல்லவர் போலவே நடிக்கிறீர்கள், அவ்வாறு நீங்கள் படம் எடுக்கச்சொல்கிறீர்களா, அல்லது அவ்வாறே கதைகள் அமைகிறதா?’ என்று நேரிடையாக கேட்ட தைரியசாலி டாக்டர் சுந்தரம் அவர்கள். அதற்கு எம்ஜிஆர் சொன்ன பதில் பெறும் ‘புன்சிரிப்பு…’ அதுபோன்று அரசுப்பணியில் இருந்தபோது அப்போதைய அமைச்சர்களிடம் தைரியமாக பேசுவாராம் இவர்.

இவர் பாண்டிச்சேரி அன்னையுடன் தன் இளம்வயதில் சந்தித்த நிகழ்ச்சிகளை என்னிடம் சொன்னதைக்கேட்டு, ‘ஞான ஆலயம்’ என்ற புத்தகத்தில் ஒரு கட்டுரை எழுதினேன், அதைப்படித்துவிட்டு ‘நன்றாக இருக்கிறது ராம்கி’ என்றார். இளம் வயதில் ரமண மகரிஷியையும், காஞ்சி முனைவரையும் பலமுறை சந்தித்தவர். இந்த மகான்களின் சந்திப்பால் ‘எளிமையாக வாழவேண்டும்’’ என்று முடிவுசெய்து அதன்படியே வாழ்கிறார்.

இவரிடம் பயிற்சி பெற்ற கண் மருத்துவர்கள் ஏராளம். நாங்கள் பல மாநாடுகளில் ஒன்றாக இருக்கும்போது, ஓரிருவர் இவரை அடையாளம் கண்டு கொண்டு, இவரை சந்தித்து பேசுவார்கள். சில அந்நாள் மாணவர்கள் இவரை பார்த்தும், பார்க்காதது போல் சென்றுவிடுவதையும் கண்டுபிடித்து என்னுடன் அவரைப் பற்றி விளக்குவார்.

இவரது அடுத்த நண்பர் ‘கேமரா…’ எந்த இடத்திற்கு செல்வதாக இருந்தாலும் ஒரு கேமரா இருக்கும். ‘டக் டக்’ என படம் எடுத்துக்கொண்டேயிருப்பார். இவருக்கு ஒரு ‘லேப் டாப்’ வைத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பியபோது, டாக்டர் நடராஜன் உடனே அதை வாங்கி கொடுத்து மகிழ்வித்தார். பல நாடுகளுக்கு அந்த நாட்களிலே சென்று வந்தவர். இவரது சென்னையில்லத்தில் ஏராளமான புத்தகங்களை வைத்துள்ளார். ‘இந்த புத்தகங்களின் அருமை என் குடுமபத்தாருக்கு தெரியாது ராம்கி, இதை எல்லாம் எடுத்துபோட்டுங்க’ என்கிறார்கள் என்று ஒரு முறை வருத்தப்பட்டார். அது போன்று பழைய புகைகப்படங்களையும் பாதுகாத்துவைத்துள்ளார்.

வயது 85+ஆனாலும் என்னுடனோ அல்லது மற்ற இளம்வயதுகாரர்களுடன் பேசும்போது சமவயதுக்கு ஏற்றார் போல் ஜோக் அடித்துக்கொண்டு சட்டென இளைஞனாகிவிடுவார். கிண்டல் அடித்தது, சிரிக்க சிந்திக்க வைப்பவர்.


இவரது பொழுதுபோக்கு, நல்ல புத்தகங்கள் படிப்பது, மாணவர்களுக்கு கண்சம்பந்தமாக சொல்லித்தருவது, அதுபற்றி பேசுவது, மற்றும் போட்டோ எடுப்பது போன்றவை. மாணவர்களுக்கு சொல்லித்தரும்போது, பல கேள்விகளை கேட்டு மாணவ மாணவிகள் எளிதில் புரிந்துகொள்ளும்படி விளக்கமளிப்பார் டாக்டர் சுந்தரம் அவர்கள்.

படிகள் முடியும் இடத்தில் இரண்டு ஓரத்திலும் மஞ்சள் ஸ்டிக்கரை ஒட்டிவிட்டால் பெரியவர்கள் படிஏறி இறங்க சௌகரியமாக இருக்கும் என்ற டிப்ஸ் தந்தவர்.

எனது படைப்புகளை மனம் திறந்து பாராட்டுவார். ஒவ்வொரு வருடமும் நான் தயாரிக்கும் கண் மருத்துவர்களுக்கான அப்ஸ்ட்ராக்ட் புத்தகத்தை முழுவதும் படித்து பின் போனில் அழைந்து பாராட்டிவருகிறார். இப்புத்தகத்தில் கடைசியில் வரும் இன்ட்எக்ஸ் பகுதியை நான் சற்று பெரிய எழுத்ததுக்களில் பிரின்ட் செய்திருந்ததை கூர்மையாக கவனித்து, பாராட்டினார். கண்பற்றி அருங்காட்சியம் அடிக்கடி நடத்துவார். அதுசம்பந்தமாக நிறைய மாடல்கள், சார்ட்களை தயாரித்து பத்திரப்படுத்தி வருகிறார்.

கோவிலுக்கு அதிகம் செல்வது மற்றும் பூஜைகளுக்கு நிறைய செலவுசெய்வது போன்றவற்றை விரும்பமாட்டார்.

தன் கடைசி மூச்சு உள்ளவரை, மக்களிடம் கண் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பது தான் இந்த எளிய இளைஞரின் லட்சியமாம்.
RAMKI

Tuesday, November 1, 2011

ராம்கியும் பாலாவும்


ராம்கியும், பாலாவும்

எனது முன்னாள் சுருக்கெழுத்து பயிற்சிக்கூடத்தின் சகநண்பர் பாலா எனும் பாலசுப்ரமணியம். நானும் இவரும் சேர்ந்தால் எப்போதும் கலாட்டா, தமாஷ் பேச்சுத்தான். நீண்ட இடைவெளிக்குப்பிறகு ரமேஷ் மூலம் இவரது நட்பு மலர்ந்தது. கோவை வரும்போதெல்லாம் பாலா என்னிடம் பேசுவார், நாங்கள் சந்திப்போம். அண்மையில் அவரது வீட்டிற்கு நானும், சீதாவும் சென்று இருந்தோம்.



KRISHNA KUMAR, RAMKI & PM BALASUBRAMANIAM & GIRIJAN, NEW CEO
PHOTO COURTESY: DR.D.CHANDRASEKAR, COVAI

இன்று இந்துஸ்தான் யூனிவர்சல் நிறுவத்தில் பாதுகாப்பு (சேப்டி) அதிகாரியாக பணியாற்றும் பாலா அண்மையில் எங்கள் மருத்துவமனையில் நடந்த தீபாவளி கொண்டாட்டதின் முடிவில் கலந்து கொண்டார். எனது தலைவர் மற்றும் சகஊழியர்களை அறிமுகப்படுத்தினேன். பார்ட்டியில் கலந்து கொண்டபோது, 'என்னடா ஒரே மலையாள அழகிகளா இருக்கு' என்று ஜொல்லுவிட்டான் வழக்கம்போல். அன்று இரவு எனது இல்லத்தில் தங்கி அடுத்தநாள் காலை 6 மணிக்கு கிளம்பிச்சென்றார். என்னை 'வாடா போடா' என்று அழைக்கும் ஒருசில நபர்களில் பாலாவும் ஒருவன்...

பாலா ஒரு சிறந்த பாடகன், நாங்கள் சேர்ந்தால் பழைய பாடல்களை சேர்ந்து பாடி மகிழ்வோம். தற்போது பாடுவதை இவரது மகன் தொடர்கிறார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பாலாவின் அம்மாவை சந்தித்து, நானும் சீதாவும் ஆசிபெற்றோம், இதை மறக்கமுடியாது!!!
வாழ்க பாலா பல்லாண்டு.......


ராம்கி