Monday, December 26, 2011

நண்பன் பாடல் சிடி வெளியீட்டுவிழா

நண்பன் பாடல் சிடி வெளியீட்டுவிழா
நேரடி வர்ணணை ராம்கி, கோவை
(Photo Courtesy: PRO Nikhil Murugan)



கோவையில் நண்பன் திரைப்பட பாடல் சிடி வெளியீட்டுவிழா இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் டிசம்பர் 23ம் தேதி மாலை 5.30 நடந்தது. சென்னையில் உள்ள எனது பத்திரிகை நண்பர் நரசு அவர்கள், என் பெயரை நண்பன் பட பிஆர்ஓ நிகில் முருகனிடம் சொல்லி, அழைப்பிதழை அனுப்பிவைத்தார். நுழைவாயிலில் 3டி கண்ணாடி அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை நடிகர் சிவா தமாஷாக பேசி தொகுத்து வழங்கினார். டர்கி அழகிகளின் இடுப்புகுலுக்கல் ஆட்டத்துடன் (பெல்லி டான்ஸ்) விழா இனிதே துவங்கியது. பின் சிவா அவர்கள் நடிகர் பிரபுவை மேடைக்கு அழைத்தார். பிரபு பேசும்போது ‘ஒருவருக்கு குடும்பம் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு நண்பர்களும் முக்கியம்’ என தன் தந்தை சிவாஜி அவர்கள் எப்போதும் சொல்லுவார் என்றார். ‘எனக்கு கோவையில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லோரிடமிருந்தும் சாப்பாட்டு என்னை தேடி வரும். வந்தா விட மாட்டேன். என் அப்பா மாதிரி தமிழ் உச்சரிப்பை சரியா பேசரவரு நம்ப சத்யராஜ், நான் விஜய் ரசிகன்’ என்றபோது பெரிய கைதட்டல்.



அடுத்து நடிகர் சத்தியராஜ் மேடை ஏறினார். ‘என்னம்மா கண்ணுகளா சௌக்கியமா?’ என்ற நக்கலுடன் பேச ஆரம்பிக்க கைதட்டலுக்கு கேட்க வேண்டுமா? பின் நடிகர்கள் ஜீவா, ஸ்ரீகாந்த், விஜய், சத்யன் என ஒவ்வொருவராக மேடை ஏறி, இயக்குநர் சங்கரையும், அவர்களின் கதாபாத்திரம் பற்றியும் பேசினர். சத்யன் பேசும்போது ‘இப்படம் எனக்கு ஒருபெரிய திருப்புமுனையாக இருக்கும்’ என்றார்.

மீண்டும் ஒரு இடைகுலுக்கள் நடனம். இயக்குநர் மற்றும் நடிகரான எஸ்.ஜே,சுர்யா பேசினார். அப்போது ‘முதல்நாள் படபிடிப்பு அன்றே சங்கர் காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து 63 ஷாட்களை எடுத்தார். சங்கர் தொடர்ந்து வெற்றிப்படங்களையே தந்து சாதனை படைத்துவருகிறார். இப்படத்தில் 2 ஷாட்டில் மட்டும் நான் வந்தாலும் எனக்கு பெருமையாக இருக்கிறது. விஜய் படபிடிப்பு 7மணி என்றால் 6.55க்கே வந்துவிடுகிறார், பாராட்டத்தக்கது’ என்றார்.

மீண்டும் ஒரு இடைகுலுக்கள் நடனம். தொடர்ந்து ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் பேசினார்கள். இப்படபிடிப்பில் தானும் விஜயும் நண்பர்கள் ஆகிவிட்டோம் என்றார். மேடை ஏறிய அனைவரும் விஜய்க்கு ஐஸ்வைத்தே பேசினர். பாடலாசியர்கள் முத்துகுமார் மற்றும் விவேகாவும் பேசினார்கள். முத்துக்குமார் தான் எழுதிய ‘ஆல் இஸ் வெல்’ என்ற பாட்டைப்பற்றி பேசினார். பிறகு படத்தின் ஒரு பகுதி திரையில் போடப்பட்டது.
அடுத்த படக்கதாநாயகர் விஜய் பேசினார். ‘என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே…..’ என ஆரம்பிக்க பலத்த கைதட்டல். பின் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பு பற்றி பேசினார். என் வீக் பாய்ட்டே யாராவது தமாஷா பேசினா, என்னலே சிரிப்பை அடக்கமுடியாது, படபிடிப்பின்போது நான் சீரியஸா நடிக்கும்போது, ஜீவா ஏதாவது ஜோக் அடிக்க, என்னால் சிரிப்பை உடனே அடக்கமுடியாது, ஆனால் ஜீவா டக்கென்று தன் டைலாக்கை பேசிவிடுகிறார். இயக்குநர் சங்கர் சார் படத்தில்) இதற்கு முன் (முதல்வன் உட்பட) இரண்டு முறை நடக்க முடியாததை குறிப்பிட்டார். அதனால் சங்கர் சார் படத்தில் இந்த வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது. நன்றி சங்கர் சார் என்று முடித்தார் பின் ஜெமினி நிறுவனத்திற்கு தன் நன்றியை தெரிவித்துக்கொண்டார். ஆள் உயர மாலை, மற்றும் மலர் கிரீடம் விஜய்க்கு அணிவிக்கப்பட்டது.



ஆவலுடன் எதிர்பார்த்த இயக்குநர் சங்கர் பேசினார், ‘சிவாஜி படபிடிப்பின்போது பூனேயில் ஒரு நாள் படபிடிப்பு ரத்தானது. அன்று 3 இடியட்ஸ் படத்தை தியேட்டரில் பார்த்தேன். படபிடிப்பு ரத்தான டென்ஷனில் இருந்த எனக்கு அப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. சிரிப்பு அழுகை என எல்லா அம்சமும் அப்படத்தில் இருந்தது. அப்படம் என் மனதிற்கு அமைதி தந்தது. மனம் ரிலேக்ஸ் ஆச்சு. நான் ரசித்ததை நம் தமிழ் ரசிகர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக இப்படத்தை இயக்கினேன். முதலில் நானே ரைட்ஸ் வாங்கி தயாரிப்பதாக இருந்தது. பின் ஜெமினி நிறுவனம் ரைட்ஸ் வாங்கியதை அறிந்தேன். இருப்பினும் இப்படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து. சிவாஜி, எந்திரன் போன்ற படத்தை மனதில் வைத்துக்கொண்டு இந்த படத்திற்கு வராம, ஒரு நல்லபடம் பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்போடு வாருங்கள். அந்த 2 படங்கள் போல் இப்படத்தில் டெக்னிகலாக அதிகம் இல்லை. ஆனா, சற்று வித்யாசமா இப்படத்தை பண்ணியிருக்கேன். அனைவரும் நல்லா நடிச்சு இருக்காங்க.

ரஜினி சாரைப்போல் விஜய் படபடிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுகிறார். ரொம்ப டிஸிப்லின். நல்ல கோஆப்ரேஷன். ரொம்ப பணிவாக நடந்து கொள்கிறார். நாளைக்கு படபிடிப்பு என்ன என்று என்னிடம் கேட்டு வீட்டில் நிறைய முறை பழகிபார்த்து படபிடிப்புக்கு வருவதால் சட் என இவரது காட்சிகளை படமாக்க முடிந்தது. முன்னாடி என் 2 படத்தில் நடக்க சத்யராஜ் அவர்களை அழைத்தேன். அவர் வரவில்லை. இப்படக்கதைக்கான தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துக்காக சத்யராஜ் சாரும் வித்யாசமான வில்லன் வேடத்தில் நன்றாக நடிச்சிருக்காரு. நிறைய நட்சத்திரங்கள் இப்படித்தில் நடிச்சிருக்காங்க. தயாரிப்பாளருக்கு என் நன்றி" என பேசினார் சங்கர். இப்படத்திற்கு உதவிய அனைத்து பெயரையும் மறவாமல் பேப்பரில்எழுதி வைத்துக்கொண்டு அனைவருக்கு நன்றி தெரிவித்தார் சங்கர்.

இயக்குநர் சந்திரசேகர் (விஜய் அவர்களின் தந்தை) தன் மகன் உயர உயர சென்றாலும், ரொம்ப பணிவா நடந்து கொள்வது எனக்கு பெருமையாக உள்ளது. இயக்குநர் சங்கர் ஒரு சிறந்த இயக்குநர். தன் மூலம் தான் இயக்குநர் சங்கருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக நினைவு கூர்ந்தார்.
படத்தின் ஒரு காட்சி மீண்டும் திரையிடப்பட்டது. இசையமைப்பாளர் ஜெயராஜ் பேசினார், பின் நண்பன் படப்பாடல் சிடி வெளியிடப்பட்டது. முதல் சிடியை இயக்குநர் சந்திரசேகரும், நடிகர் பிரபும் பெற்றுக்கொண்டார்கள். இயக்குநர் சங்கருக்கு அணிவித்த மாலையையும் சால்வையும் தன் குருநாதர் சந்திரசேகருக்கே மீண்டும் சங்கர் அணிவித்து மகிழ்ந்தார்.

நுழைவுச்சீட்டு முதல் மேடையும் 3டி முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. பின் ஜெயராஜ் அவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது அவர் ஒரு கிரேன் மூலம் தொங்கு மேடையில் இருந்தபடியே நிகழ்ச்சியை ஆரம்பித்தது வித்யாசமாக இருந்தது.

ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர். ஆனால் மைதானத்தில் போதிய டாய்லெட் வசதி இல்லாததால், கருவுற்ற பெண்களும், மற்ற பெண்களும் சற்றே திண்டாடியதை பார்க்க முடிந்தது. திறந்தவெளி அரங்கில் பனிபொழிய பார்த்து ரசித்தது மறக்க முடியாத ஒரு மாலைப்பொழுதாக இருந்தது.

RAMKI
Wadalaramki@yahoo.co.in
M 9790684708