Monday, August 12, 2013

கங்காரு பைக்

My article in Varamalar dt 11 8 2013
கங்காரு பைக்

அமெரிக்காவில், குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல, "கங்காரு பைக்' எனும் புது மாடல் சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது.
அலுமினியத்தால் செய்யப்பட்டு, பாலித்தீன் கவரால் மூடப்பட்டு, காற்று, மழை, வெயில், பனி என, அனைத்தையும் தாங்கும் விதத்தில் உள்ளது. மேலே உள்ள மூடியை, பத்தே வினாடிகளில் திறந்து விடலாம். குழந்தையை உள்ளே வைத்து மூடியும், திறந்தபடியும், எங்கும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லலாம்.
இதில் உள்ள, அனைத்து பாகங்களையும் நம் தேவைக்கு ஏற்றாற் போல, வேகமாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு குழந்தை மட்டுமின்றி, இரண்டு குழந்தைகளையும் உட்கார வைத்து, வெளியே அழைத்துச் செல்ல முடியும். இருக்கையில், பெல்ட் வசதி உள்ளது. மூடி போட்டு ஓட்டினாலும், குழந்தைகளுக்கு மூச்சு திணறாது. இந்த வாகனத்தை, பின்புறம் அல்லது மேற்புறம் மற்றும் பக்கவாட்டு என, எந்த பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக் கொள்ளலாம்.
ஐட்ராலிக் பிரேக் முன்பகுதியில் இருப்பதால், எந்த ஆபத்தான நேரத்திலும், இந்த, "கங்காரு பைக்'கை நிறுத்த முடியும். குழந்தைகள் மட்டுமின்றி, அவர்களுக்கு வேண்டிய உணவு, துணி போன்ற இதர பொருட்களை வைக்கவும், போதிய இடவசதி உள்ளது. எல்.இ.டி., விளக்குகள் உள்ளன.
பெண்கள் வெளியே செல்லும் போது, இந்த சைக்கிளை ஓட்டுவதால், உடற்பயிற்சி செய்வது போலாகி விடுகிறது. குழந்தையை தூக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வண்டி, தாய்மார்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

வெள்ளை மீசை பறவை!


 My article in VARAMALAR dt 11.8.2013

வெள்ளை மீசை பறவை!


படத்திலுள்ள, இந்த இன்கா டெர்ன்ஸ் எனும் பறவைகள் வளரும் போது, கூடவே நீண்ட வெள்ளை மீசையும் வளருகிறது. பெரு மற்றும் சிலி நாடுகளில் இவை அதிகம் காணப்படுகிறது.
ஸ்டர்னிடி குடும்பத்தை சேர்ந்த இப்பறவைகள், நீர் பறவை வகையை சேர்ந்தது. பார்க்க நம்ம ஊர் காக்கையை போல இருந்தாலும், கருப்பாக இல்லாமல் சாம்பல் நிறத்தில் காணப் படுகிறது. இதன் அலகுகள், ஆரஞ்சு கலந்த சிவப்பில் இருக்கும். தலைப்பகுதிக்கு, கீழ் இருபுறமும் வெள்ளை மீசை இருக்கும் ஒரே பறவை இனம் இதுதான். இதன் கால்களும், பாதமும் மருதாணி வைத்ததை போன்று, கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
பாறைகளுக்கு நடுவிலும், மரப்பொந்துகளிலும் முட்டை இட்டு குஞ்சு பொறிக்கும். ஒரு முறைக்கு, ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். இம்முட்டைகளை இப்பறவை கள், நான்கு வாரங்கள் அடைகாக்கும். இந்த அரிய வகை பறவை உலகளவில், மிக குறைந்த எண்ணிக்கையில், உள்ளதால், அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிகையிலும் கைவண்ணம்!

 My article in VARAMALAR  ஆகஸ்ட் 11,2013
சிகையிலும் கைவண்ணம்!

உடைக்கு ஏற்ற வண்ணத்தில் செருப்பு, கைப்பை, காதணி, வளையல், கண்ணாடி, பர்ஸ் என்று வைத்துக் கொள்வது முன்பு பேஷனாக இருந்தது. தற்போது, தலை முடியில் வண்ணம் தீட்டிக் கொள்வது தான், "லேட்டஸ்ட்' பேஷன். வெளிநாடுகளில், தலைமுடியை வெவ்வேறு வண்ணத்தில் மாற்றி, வண்ண மயமாகி விட்டனர். இவ்வகை வண்ண மயமான சிகை அலங்காரத்தை, தற்போது, மேலை நாட்டு பெண்கள் மிகவும் விரும்பி அலங்கரித்து கொள்கின்றனர். நம்ம ஊரு ராக்காயி, மூக்காயி என்று அனைவரும், சீக்கிரம் இப்படி அலங்கரித்துக் கொள்ளும் காலம், வெகு தொலைவில் இல்லீங்கோ!

Friday, August 9, 2013

எம்.எஸ்.சுப்பு லட்சுமி



Yesterday's (30.6.2013) Varamalar (Dinamalar's supplement) carried my below mentioned article. 


வாஜ்பாய் பதவி ஏற்ற பின், எம்.எஸ்.சுப்பு லட்சுமியை பார்க்க அவரது வீட்டிற்கு வருவதாக தகவல் கிடைத்தது. ஏற்கனவே, எம்.எஸ்.,சின் வீடு படு சுத்தமாக இருக்கும். தரையை பார்த்து தலை வாரலாம்; அத்தனை சுத்தம்.
இருப்பினும், மேலும் சுத்தம் செய்ய, வீட்டில் உள்ளவர்கள் பிசியாக இருந்தனர். இதில், வீட்டில் வேலை செய்வோரும் அடங்குவர். அப்பொழுது எம்.எஸ்.,சின் புது டிரைவரும், வீட்டை சுத்தம் செய்வதில் ஈடுபட்டார்.
எம்.எஸ்.,சின் அறையில், ஒரு மூலையில் ஒரு பழைய கைத்தடி தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த டிரைவர், "வாஜ்பாய் வரும் சமயத்தில், இந்த பழைய கைத்தடி இங்கு எதற்கு?' என்று அதை எடுத்து போய், கார் ஷெட்டின் மூலையில் போட்டு விட்டார். சற்று நேரம் கழித்து, எம்.எஸ்.,அம்மா குளித்து விட்டு தன் அறைக்கு வந்த போது, தன் அறையில் இருந்த கைத்தடியை காணவில்லை என்று, பதட்டப்பட்டார்.
எம்.எஸ்., எப்பொழுதும் எதற்காகவும் கோபப்பட மாட்டார். வேலையாட் களிடம், சத்தம் போட்டு கூடப் பேச மாட்டார். அமைதியாக, அனைவரிடமும் அந்த கைத்தடியை பற்றி கேட்டார். வீட்டில் உள்ளோர், அந்த கைத்தடியை மற்ற அறைகளில் தேட ஆரம்பித்தனர். அப்பொழுது உள்ளே நுழைந்த டிரைவர், "எல்லாரும் எதை இப்படி தேடுறீங்க?' எனக் கேட்டார். "அம்மா அறையில், மாட்டியிருந்த கைத்தடியை காணவில்லையாம். அதைத்தான் தேடுகிறோம்...' என்றனர். "அப்படியா... அந்த பழைய கைத்தடியை, நான் தான் வாஜ்பாய் வரும் சமயத்தில், அம்மா அறையில் எதற்கு என்று, கார் ஷெட்டில் போட்டு விட்டேன். இதோ எடுத்து வருகிறேன்...' என்று ஓடினார்.
எம்.எஸ்.,சுக்கு டிரைவர், கைத்தடியை கார் ஷெட்டில் எடுத்து வைத்திருந்த தகவல் தெரிவிக்கப் பட்டது.
கைத்தடியுடன் எம்.எஸ்., அறைக்கு வந்த டிரைவரை பார்த்து, "ஏம்ப்பா... நீ தூக்கி ஓரமா போட்டியே, அந்த கைத்தடி யாரோடதுன்னு தெரியுமா...' என்று மெல்லிய குரலில் கேட்டார்.
"அம்மா எனக்கு தெரியாதும்மா, ரொம்ப பழையதா இருக்கேன்னு, எடுத்து ஷெட்டில் போட்டேன்...' என்று நடுக்கத்தோடு பதில் சொன்னார்.
"பரவாயில்லேப்பா... இது ராஜாஜி என் வீட்டுக்கு வந்தப்போ, மறந்து வைத்து விட்டுப் போனது. அதை, நான் பத்திரமா பாதுகாத்து வருகிறேன். அது எனக்கு விலை மதிப்பில்லாததுப்பா...' என்று அமைதியாக சொல்லி, மீண்டும் அந்த கைத்தடியை தன் அறையில் மாட்டி, மகிழ்ந்தார்.
ராஜாஜியின் கைத்தடிக்கு இத்தனை மரியாதை என்றால், ராஜாஜி மீது எம்.எஸ்., வைத்திருந்த மரியாதையை சொல்ல வேண்டுமா!

இசை மழை


My small article in y'days (28 7 2013) Varamalar.

 இசை மழை என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இன்னொரு புதுவிதமான இசை மழையை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா...
இதோ...
ஜெர்மனியில், ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தண்ணீர் பைப்புகளை விதவிதமாக வளைத்து, இசைக்கருவிகள் போன்று பொருத்தியுள்ளனர்.
மழை கொட்டும் போது, மழையின் அளவுக்கு ஏற்றார் போல் தண்ணீர், அந்த பைப்புகள் வழியாக புகுந்து, வித்தியாசமான, விதவிதமான ஓசையை, எழுப்புகிறது. இக்குழாய்களிலிருந்து வெளிவரும் சத்தத்தை, அங்கே, "மழை இசை' என்கின்றனர். ஒவ்வொரு குழாயிலிருந்தும் மற்றொரு குழாயில் தண்ணீர் விழுவது போன்ற இடைவெளி விட்டு பல குழாய்கள் வைத்துள்ளதால், இதிலிருந்து வரும் சத்தம், இதுவரை யாரும் கேட்டிராத வகையில் ரசிக்க வைப்பதாக கூறுகின்றனர்.
கொட்டும் மழை பொழிய துவங்கியதும், இந்த இசையை கேட்க, இந்த அடுக்குமாடி வீட்டில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், குடையை பிடித்துக் கொண்டு, இசையை ரசிக்க, எக்கச்சக்கமான கூட்டமும் கூடிவிடுகிறது.


முத்தம் கொடுக்க வாரீகளா!


My small article in VARAMALAR dt 4.8.2013

முத்தம் கொடுக்க வாரீகளா!

பெண்களின் உதடுகள் போன்று, மிக அழகாக, சிவப்பாக இருக்கும் இந்த இதழ்கள், "சைகோடிரியா எலாட்டா' எனும், ஒரு வகை தாவரத்துடையது. இவ்வகை செடிகள், மழை அதிகம் பொழியும் கொலம்பியா, கோஸ்டாரீகா, பனாமா போன்ற நாடுகளில், அதிகமாக காணப்படுகின்றன. இதனை, "ஊக்கர்ஸ் லிப்ஸ்' என்று அழைப்பர். இந்த இதழ்கள், சின்ன சின்ன பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளை தன் பக்கம் இழுத்து விடும் தன்மை கொண்டது.
பார்த்ததும், நம்மை முத்தம் கொடுக்கத் தூண்டும் இவ்விதழ்கள், நீண்ட நேரம் இப்படியே இருக்காது. காரணம், இரண்டு இதழ்களுக்கு இடையிலிருந்து குட்டி குட்டி பூக்கள் பூக்கும் என்பது தான், ஆச்சரியமான விஷயம்.

உடைக்கு ஏற்ற சிகை அலங்காரம்