'அடடே' மனோகரின் அதிரடி பேட்டி
பேட்டி ராம்கி, கோவை
'அடடே மனோகர்' அவர்கள் நம்மை நாடகத்திலும், திரையிலும் சிரிக்க வைத்தவர். அவரிடம் நாம் கேட்ட 'சுருக்' கேள்விகளுக்கு 'நறுக்' என்று பதில் வந்தது. அதை நீங்களும் படித்து மகிழலாமே?
'அடடே' என்று அடைமொழி கிடைத்து எப்படி? யாரால்?(ஒரு சின்ன பிளாஷ்பேக்)
1986 வெளியான 'அடடே மனோகர்' தொலைக்காட்சி தொடரில் நான் அடிக்கடி பலவிதமாய் 'அடடே' என்ற வார்த்தையை பிரயோகிப்பேன்; அதனால்...அதன் தயாரிப்பாளர் திரு. கிருஷ்ணன் அவர்களே வைத்த பெயர்தான் 'அடடே மனோகர்' என்று அந்த தொடருக்கு!!
*
அடடே மனோகருக்கும், ஆர்எஸ் மனோகருக்கும் என்ன வித்யாசம்?
ஆர்.எஸ்.மனோகர் இறந்துவிட்டார்;
அடடே மனோகர் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்!!
*
ஒரு படத்தில் விவேக்கை ஒரு பெண்ணா மாற்றிய உங்களுக்கு நிஜமாகவே ஒரு ஆண்மகனை பெண்ணாகமாற்ற சந்தர்ப்பம் கிடைத்தால் யாரை தேர்வு செய்வீர்கள்- (அது ஒரு நடிகராகவோ அல்லது அரசியல் வாதியோகவோ, யா வேண்டுமானாலும் குறிப்பிடலாம்)
மன்மோகன்சிங்!!
*
அதுபோன்று ஒரு பெண்ணை ஆணாக மாற்றும் சக்தி உங்களுக்கு கிடையாதல் எந்த பெண்ணை ஆணாக மாற்றுவீர்கள்?
சோனியா காந்தி!!
*
உங்களை நாடக அல்லது திரை உலகில் நெகிழவைத்த நிகழ்ச்சி அல்லது நபர்
நிறைய காட்சிகளில் நான் நெகிழ்ந்துவிடுவேன்; சிரிப்பதிலும் அப்படியே; நான் மிகவும் 'எமோஷனல்'.
*
திரையுலக நண்பர் யார்- நாடக உலக நண்பர் யார்?
திரை - டெலலி கணேஷ்; நாடகம் - காத்தாடி
*
ரசிகர்களுடன் நடந்த மறக்கமுடியாத நிகழ்ச்சி அல்லது சம்பவம்
நான் மேடையில் பாடி நடிப்பேன்....பங்களூருவில் ஒரு தடவை ஒரு பாட்டை (எம்.கே.டியின் ஒரு பாட்டு) ஒரு வரி பாட வேண்டும்; அவ்வளவே; ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க முழு பாட்டையும் பாடி, ரயிலை கடைசி நிமிடத்தில் பிடித்தோம்.
*
ரஜினி அல்லது கமலுக்கு அப்பாவா நடிக்க ஒரே சமயத்தில் வாய்ப்பு வந்தால் யாருடைய படத்தில் நடக்க விருப்புவீர்கள்?
எனக்கு இருவரும் ஒன்றே; ஆனால் இருவரும் என்னை சத்தியமாக கூப்பிடமாட்டார்கள்; ஏனென்றால் நான் யாரென்றே அவர்களுக்கு தெரியாது.
*
பிடித்த நாடக அல்லது சினிமை இயக்குநர் யார்
பாலு மகேந்திரா; அனால் அவருக்கு என்னவோ என்னை கண்டாலே பிடிக்காது.
*
பிடித்த தமாசு நடிகர் அல்லது நடிகை யார்
ஆச்சி மனோரமா & மறைந்த நாகேஷ்.
*
மிகவும் ரசித்த ஜோக் எது
மனைவி: என் கணவர் என்னுடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டே ஓடிவிட்டார்.
இன்ஸ்பெக்டர்: (மிகுந்த யோசனைகுப்பின் தனக்குள்) ஓ! அப்படி ஒரு வழி இருக்கா?
*
சந்திரபாபு முதல் சந்தானம் வரை நினைத்த உடனே வரும் தமாஷ் பஞ்ச் டயலாக் எது?
வரும் ....ஆனா வராது - என்னத்தெ கன்னையா!!!
*
நீங்கள் நடித்த கதாபாத்திரத்தில் தங்கள் மனனைவி மிகவும் பாராட்டிய கதாபாத்திரம் எது?
'அடடே மனோகர்' என்று நினைவு; அவளே மறைந்துவிட்டாளே!
*
நீங்கள் ஒரு மகா கவி என்பது எனக்குத்தெரியும்....ஒரு நாலுவரி கவிதை ஒன்று சுடட்சுடத் தாருங்களேன்.......
காரிகையின் அணைப்பிற்கு ஏங்கியதோர் காலம்
காலனின் அணைப்பிற்கு ஏங்குகிறேன்
காரிகையும் அந்நாளில் வந்தாளில்லை
காலனும் இந்நாளில் வருவதாயில்லை
எப்பொருளும் ஏங்கும் போது கிட்டுவதில்லை
அப்பொருள் கிட்டும்போது நமக்கதில் நோக்கமில்லை
இப்பொருளை சிந்திக்குங்கால் விளங்கியதோர் உண்மை
மெய்ப்பொருளுக்குட்பட விதி யீதென்பது!
கேள்வி ராம்கி, கோவையிலிருந்து
பதில் அடடே மனோகர், சென்னையிலிருந்து