Wednesday, August 10, 2011

விவரமான ஆளு விவேக், நண்பேன்டா



(குமாரின் மலரும் நினைவுகள் சில)


விவேக் என்றதுமே நமக்கு காமெடி நடிகர் விவேக் தான் நினைவுக்கு வருவார். இருந்தாலும்
30 வருடங்களுக்கு முன்பு டைப்பிங் இன்ஸ்டூட்டில் டைப்ரைட்டிங் மற்றும்
சுருக்கெழுத்து கற்றுக்கொண்டிருக்கும் போது எனக்கு அறிமுகமானவர் தான் விவேகானந்தன்
எனும் விவேக். இவரை ஆனந்த் என்று அவரது உறவினர்கள் அழைப்பர்.
அப்போது இன்ஸ்டூட் மேனேஜராக இருந்தவர் திரு சுப்பாராவ் அவர்கள்.

நாங்கள் முதலில் சந்திக்கும் போது அவர் கே. கே. நகர் பஸ் நிலையம் எதிரே ஆவின் பால்
நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். எப்போது இவரைப் பார்க்கச் சென்றாலும்,
எதிலே உள்ள டீ கடைக்கு அழைத்துச்சென்று டீ மற்றும் சுவையான பட்டர் பிஸ்கட் வாங்கி
கொடுப்பார். 'பிளேவர்டு மில்க்' கொடுத்து உபசரிப்பார். ஒரு முறை என்னை
சாலிகிரமத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றார். நான் முதலில் சென்ற நாள்
பொங்கல் திருவிழா நாள். அதனால் அவரது அன்னையார் எனக்கு பொங்கல், வடை, பாயசம் என விருந்து படைத்தனர். தனது இரு சகோதரர்களையும் சகோதரிகளையும் அறிமுகப்படுத்தி
வைத்தார்,ஒவ்வொரு பொங்கல் நாள் அன்றும், நான் விவேக் வீட்டிற்கு சென்றதை நினைக்காமல் இருந்ததில்லை. அன்றிலிருந்து எங்களது நட்புப்பாலம் தொடர்ந்து வருகிறது,


நான், சுவாமி, விவேக், சங்கர், சேகர், ரமேஷ் போன்ற ஒரு குட்டி கேங்க் அமைந்தது.
அனைவரும் ஒன்று சேர்ந்து மாலை 'வாக்கிங்' செல்வது, சினிமா படம் பார்ப்பது என்று
நேரத்தை கழிப்போம். அப்போது சுவாமி தான் அதிகமாக ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார்.
பின் விவேக்கும் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். நாங்கள் ஓட்டலுக்கு அடிக்கடி
செல்வோம். அப்போது நாங்கள் அனைவரும் துர்கா ஓட்டலுக்கு போகலாம் என்று
முடிவுசெய்வோம். ஆனால், விவேக் மட்டும், வேறு ஒரு ஓட்டல் பெயரைச் சொல்லி அங்கு
போகலாமே என்பார். நாங்கள் அனைவரும் ஒன்று நன்றாக இருக்கிறது என்றால், விவேக் அப்படி ஒன்றும் நன்றாக இல்லை என்று எதிர் மறையாக பேசுவார். அடிக்கடி இப்படி எதிர் மறையாக பேசுவதால், நான் ஒரு நாள் பொறுமை இழந்து, 'ஏன் இப்படி எதற்கு எடுத்தாலும்
எதிர்மறையாக பேசுகிறாய் விவேக்' என்று கேட்டுவிட்டேன். 'எல்லோருமே நன்றாக இருக்கு என்று சொல்லும் போது, நான் மட்டும் எதிர் மறையாக பேசுவதால், எனக்கு தனி மதிப்பு' போன்ற ஏதோ ஒரு காரணம் சொன்னார். ஆனால் அது சரியாக எனக்கு இன்று நினைவில் இல்லை. இவரது இச்செய்கையை நான், சுவாமி, மற்றும் சங்கரும் பேசும் போது கலாட்டா செய்வோம்.


திநகரில் ஒரு கெமிகல் கம்பெனியில் வேலை பார்த்தார். அப்போது எனக்கும் அந்த
கம்பெனியில் சில காலம் டைபிஸ்ட் வேலை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். பிறகு
மவுண்ட் ரோடில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தபின், அந்த கம்பெனியில்
எனக்கு வேலை வாய்ப்பு கிடைக்கு அவர் முயற்சி செய்தார்.

இவரது சகோதரர் சகோதரிகளின் திருமணத்தில் நாங்கள் கட்டாயம் இருப்போம். அவரது
நெருங்கிய உறவினர்களுக்கு எங்கள் மூவரையும் நன்றாக தெரியும். அனைவரும் அன்போடு
என்னுடன் பழகுவர். திருமணமான ஒரு சகோதரியின் வீட்டிற்கு ஒரு முறை
அழைத்துச்சென்றார். இவர் வீட்டில் இருந்தால் எதையாவது சொல்லி சிரிக்க வைப்பார்
அனைவரையும். ஒரு முறை திரு சுப்பாராவ் அவர்களுக்கு குழந்தை பிறந்த போது, 'என்ன
குட்டி போட்டாச்சா?' என்று கேட்டது எங்கள் அனைவரையும் வருத்தம் அடையச்செய்தது. சில சமயம் தமாஷாக இவர் பேச, எங்களுக்கு ஒரு மாதிரியாக இருக்கும்!!

காலங்கள் ஓடின… அவருக்கு காதல் திருமணம் முடிவானது. காதலியை ஒருமுறை எங்களுக்கு
அறிமுகப்படுத்தினார். திருமணம் தி. நகரில் உள்ள திருமணக்கூடத்தில் சிறப்பாக
நடந்தது. நானும், சங்கரும் அவருடன் இருந்து திருமணத்தில் சில காரியங்களை செய்து ஒரு
குடும்பத்திருமணம் போன்று மகிழந்தோம். எனது திருமணத்திற்கும் விவேக் நெல்லைக்கு வந்திருந்தார்.

மங்கை இதழில் பணியாற்றும் போது, ஒரு இளம் தம்பதிகளை வைத்து தீபாவளி இதழுக்கு ஒரு போட்டோ பேட்டி எடுக்கவேண்டும் என ஆசிரியர் என்னிடம் சொல்ல, நான் உடனே அண்மையில் திருமணம் ஆகியிருந்த விவேக் அனு தம்பதிகளை அறிமுகப்படுத்தினேன். சுமார் 10 புகைப்படங்களுடன் விவேக் அனு போட்டோக்கள் 2 பக்கத்திற்கு மங்கை இதழில் வெளியானது. பலர் அப்புத்தகத்தை பார்த்து பாராட்டியதாக இத்தம்பதிகள் பின்னர் என்னிடம் சொன்னார்கள். இந்நிகழ்ச்சி அவர்களுக்கு நிச்சயம் ஒரு மறக்க முடியாத சம்பமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.


ஒரு முறை நாங்கள் அனைவரும் தம்பதிகளாக கோடைகானலுக்குச் சென்றோம். இதில் சுவாமி, சங்கர், விவேக் மற்றும் அவரது மனைவியின் தம்பியும் வந்தார்கள். சாமியின் மகன் ஷியாம் அப்போது கைக்குழந்தையாக இருந்தான். ரயிலில் ஒருபுடவையை கட்டி அதில் உறங்கிகொண்டிருக்க, திடீரென துணி கிழற்று விழ, குழந்தை ஒருவரது மடியில் டக் என விழுந்தான். நல்ல வேலை, குழந்தைக்கு அடிபடவில்லை. சங்கரின் கைக்குழந்தை வினோத்க்கு குளிர் ஒத்துக்கொள்ளாமல் காய்ச்சல் அடித்தது. மற்றபடி எங்களது இந்த பிக்னிக் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோன்று பல முறை வரவேண்டும் என முயற்சி செய்தோம், ஆனால் அது இன்று வரை நடக்கவில்லை.

பிறகு கோவையில் அவருக்கு வேலைகிடைக்க, ஒரு வீட்டையும் கட்டினார். நான், சுவாமி,
சங்கரும் அவரது புதுமனை புகுவிழாவிற்கு சென்ற வந்தோம். நாங்கள் அவருக்கு ஒரு
அலங்கார விளக்கு ஒன்றை பரிசாக கொடுத்தோம். அதை மவுண்ட் ரோடில் உள்ள ஒரு கடையில் வாங்கினோம். பிறகு எனது சகோதரர் மகள் காயத்ரிக்கு வங்கித் தேர்வு கோவையில் நடக்க,எங்களை அவரது வீட்டில் 3 நாட்கள் தங்க வைத்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். இதையும் மறக்க முடியாது.

எனது அன்னை இறந்த செய்தி கேட்டு, ஆறுதல் சொல்ல விவேக் என் போரூர் வீட்டிற்கு ஒரு
முறை வந்து சென்றார்.

காலச்சக்கரம் மேலும் சுழல்கிறது. சென்னைக்கு மீண்டும் வேறுவேலை கிடைக்க விவேக் நடப்பு தொடர ஆரம்பித்தது. அப்போது சென்னையிலும் ஒரு பெரிய வீட்டை கட்டினார். அதன் புதுமனை புகுவிழாவிற்கு சுவாமி மற்றும் சங்கரை அழைத்த விவேக், என்னை அழைக்கவில்லை. அது ஏன் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இருப்பினும் எங்கள் நட்புக்கு குறுக்கே இது ஒரு பெரிய தடையா இருந்ததில்லை. நான் என்றும் வசதி வாய்ப்பைப் பார்த்து நட்பை பரிமாறியது கிடையாது. முதன் முதலில் எப்படி சந்தித்தேனோ, அப்படியே மற்றவர்கள் எவ்வளவு பெரிய வசதிக்கு மாறினாலும் அதே அன்போடு தான் பழகி வருகிறேன்.


பிறகு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, மெல்ல மெல்ல எங்கள் நட்பு வட்டதில் இருந்து
விவேக் விலகினார். நாங்கள் ஏன் இப்படி திடீரென யாருடனும் தொடர்பில் இல்லை என்று
தலையை பிய்த்துகொண்டோம் பிறகு இவரது உறவினர் ஒருவரை போரூரில் சந்திக்க அவரிடம் இருந்து தொலைபேசி எண் கேட்டு நானாக தொடர்பு கொள்ள ஆரம்பித்தேன்.

இவரது சகோதரர்கள் அன்பழகன், கோவிந்த ராஜ் எங்களை மிகவும் அன்போடு நடத்துவார்கள்.

எனது மனைவி சீதாவை உரிமையோடு ஒரு சகோதரர் அழைப்பது போன்று பெயர் சொல்லி சீதா என அழைக்கும் நட்பு வட்டதத்தில் இவரும் ஒருவர்.


கடுமையாக உழைத்து பல சோதனைகளை தான்டி, தன் சொந்த கம்பெனிக்கு இயக்குநர் என்ற அளவில் சுயதொழில் செய்து வருகிறார் விவேக். இவரது மனைவி அனு. அன்போடு பழகக்கூடியவர், இவர்களுக்கு ஒரு மகள் சுசித்ரா மற்றும் இரட்டை மகன்களும் 11 வகுப்பு படித்து வருகிறார்களாம். இவரையும் இவரது குடும்பத்தாரையும் பார்த்து பல வருடங்கள் ஆவிட்டது, விரைவில் சந்திப்போம்.

வளர்க முன்பு போல் எங்கள் அனைவரது நட்பும்.

நண்பேன்டா ................நண்பேன்டா ........................நண்பேன்டா

1 comment:

  1. Dear Kumar, Fantastic! You have recaptulated all the events sequentially. Its quite nostalgic.
    Regards,
    M. K. Narayanaswam [SWAMY], Gurgaon

    ReplyDelete