Showing posts with label மாமனிதர் டாக்டர் பத்ரிநாத். Show all posts
Showing posts with label மாமனிதர் டாக்டர் பத்ரிநாத். Show all posts

Friday, February 12, 2010

மாமனிதர் டாக்டர் பத்ரிநாத்

மாமனிதர் டாக்டர் பத்ரிநாத் அவர்களுடன்
3ம் தேதி, 3 மணிக்கு, 30 நிமிடங்கள்
(டாக்டர் பத்ரிநாத் - ராம்கி சந்திப்பு)


சங்கர நேத்ராலயா (சென்னை) என்ற பெயரை கேட்டதுமே நம் மனக்கண் திறக்கும். ஆசியாவிலேயே சிறந்த கண் மருத்துவனை இது. இங்கு பணிபுரிந்த அல்லது பயிற்சி பெற்ற, பல கண் மருத்துவர்கள் தாங்கள் சங்கர நேத்ராலயாவை சேர்ந்தவர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய ஒரு சிறந்த பல்கலைக்கழகம். நிறைய கண் மருத்துவர்களும், கண் சம்பந்தமாக தொழில நடத்துபவர்கள் கூட பகிரங்கமாக சங்கர நேத்ராலயாவில் பயிற்சி பெற்றவர் என்பதை “போர்டு” போட்டு மக்களை இழுப்பதையும் பார்த்திருக்கிறேன். இத்தனை சிறப்பு மிக்க கண் மருத்துவமனையின் தலைவர் தான் டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத் அவர்கள்.

சென்னை செல்லும்போதெல்லாம் அவரை, அவரது மருத்துவமனையில் சந்திக்க வேண்டும் என்று பல ஆண்டுகாளாக நினைத்திருந்தேன். இம்முறை நான் சென்னை வருவதை முன் கூட்டியே அவருக்கு தெரிவித்து அவரை சந்திக்க நேரம் கேட்டு இமெயில் அனுப்பியிருந்தேன். ஓரிரு நாட்களில் அவரிடம் இருந்து பதில் இமெயில் வந்தது. 2010 பிப்ரவரி 3ம் தேதி, 3 மணிக்கு சந்திக்க வரமுடியுமா? என்று கேட்டு இருந்தார். மேலும் 2ம் தேதியே அவரது உதவியாளர் திரு, செந்தில் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு எனது வரவை உறுதிசெய்துகொண்டார்.

பிப்ரவரி 3ம தேதி மதியம், 2.30 மணிக்கே சங்கர நேத்ராலயாவில் முதன் முதலாக என் மனைவி சீதாவுடன் நுழைந்து, அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலிரிடம் “வரவேற்பு அறை எங்கே?” என்று கேட்க அவர் நேரே கையை நீட்டினார். அங்கு சென்று “டாக்டர் எஸ்.எஸ்.பி அவர்களின் அறை எங்கு உள்ளது? 3மணிக்கு என்னை சந்திக்க நேரம் கொடுத்துள்ளார்” என்று ரிசப்ஷன் பெண்மணியிடம் சொல்ல, என்னை சற்று ஆச்சர்யத்தோடு பார்த்து “உங்களுக்கு அவர் டைம் கொடுத்திருக்காரா” என்று கேட்க, “ஆமாம். நான் கண் நோயாளி அல்ல” என்று சொன்னபிறகு “புதிய கட்டிடத்தில் 2ம் மாடிக்கு செல்லுங்கள்” என்று மென்மையான குரலில் சொன்னார். புதிக கட்டிடத்தில் நுழைந்த்தும் அங்கு உள்ள வரவேற்பாளர் யாரை சந்திக்க வேண்டும் என்று கேட்டு, பிறகு செந்தில் அவர்களுடன் போனில் பேசி உறுதிசெய்து கொண்டபின், பதிவேட்டில் எங்களின் விவரங்களை கேட்டு பிறகு அணிந்து கொள்ள ஐடி கார்டுகளை கொடுத்து, இதை அணிந்து 2வது மாடிக்கு செல்லுங்கள் என்று கூறினார்,

லிப்ட் மூலம் 2வது மாடியில் நுழையும் போதே திரு. செந்தில் எங்களை அன்போடு வரவேற்று “ராம்கி சார் தானே? இங்கே உட்காருங்கள்..சார் ஒரு மீட்டிங்கில் உள்ளார். இப்போது வந்துவிடுவார்” என்றார். நாங்கள் அங்கிருந்த ஒரு சில புத்தகங்களை புரட்டிகொண்டிருந்தபோது மிக அமைதியாக டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் உள்ளே வர நாங்கள் இருவரும் கைகூப்பி வணங்கினோம். எங்களுக்கு முன்பே காத்திருக்கும் ஒருவரை உள்ளே அழைத்துச்சென்றார். அதற்குள் செந்தில் எங்களுக்கு சுடச்சுட காபிக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஓரிரு நிமிடத்தில் எங்களை டாக்டர் எஸ்.எஸ்.பி. உள்ளே அழைக்க நான் மட்டும் முதலில் சென்றேன். என்னைக் கண்டதும் தன் இருக்கையை விட்டு எழுந்து, “வாங்க ராம்கி எப்படி இருக்கீங்க??..எப்போ சென்னைக்கு வந்தீங்க?” என்றார். பிறகு “நீங்க தயாரித்த அப்ஸ்ட்ராக்டர் புத்தகங்கடள எல்லாம் ரொம்ப ஜோர செஞ்சிருக்கீங்க..ரொம்ப சந்தோஷம்.. இந்த மாதிரி புத்தகம் வெளியிடுவது சாதாரண காரியம் இல்லே. யூ ஆர் டுயிங் எ வெரி குட் ஜாப்...” என்று மனம் திறந்து பாராட்டினார். “சார், எல்லாம் தங்களின் ஆசிர்வாதம்” என்று சொல்லி முடிப்பதற்குள், “ராம்கி காபி சாப்பிடுறீங்களா” என்று கேட்க, “நன்றி சார் இப்போது தான் காபி குடித்தேன்” என்று சொன்ன போது, “இங்கே காபி குடித்தீங்களா” என்று மீண்டும் ஒரு முறை உறுதிசெய்து கொண்டார். பின் என்குடும்பத்தினர் பற்றியும். என் மகனது படிப்பு பற்றியும் விவரம் கேட்டறிந்தார்.

“சார் என் மனைவி சீதாவும் வந்திருக்காங்க” என்றதும், “அட அவுங்களையும் உள்ளே கூப்பிடுங்க” என்றார். சீதா வணக்கம் தெரிவித்து அமாந்த்தும், “எப்படி இருக்கீங்கம்மா? பையன் நல்லா படிக்கிறானா?” என்று விசாரித்தார். பிறகு 10/15 நிமிடங்கள் எங்களது வாழ்க்கை முறையும் கேட்டறிந்தார். தானும் தன் 17வது வயதில் ஆஸ்டலில் படித்த்தை நினைவுகூர்ந்து, “பேசாம உங்க பையனையும ஆஸ்டலில் சேர்த்திருடுங்கோ...நீங்க கோவைக்கு சென்று ராம்கியோட செட்டில் ஆயிடுங்க” என்று சீதாவிடம் சொன்னார். மேலும், “ஆஸ்டல் நல்லா இருக்கா? ரேகிங் ஏதுவும் இல்லையே?....நல்ல ஆஸ்டல் தான்னா பேசாம ஆஸ்டலில் போட்டுங்க..ஆஸ்டல் வாழ்க்கையும் ஒரு விதமான வாழ்க்கைதான்...கொஞ்சம் பழகினா சரியாயிடும். எப்படியும் காலேஜ் படிப்பு முடிந்து மேல்படிப்புக்கு ஸ்ரீராம் தனியே இருக்க வேண்டியிருக்கும் இல்லயா?” என்று ஒரு தந்தைக்கு உள்ள பாசத்தோடு எங்களுக்கு அறிவரை கூறினார் டாக்டர் பத்ரிநாத் அவர்கள். “அம்மா நீங்க காபி சாப்டீங்களோ? இங்கே நம்ம ஆஸ்பத்திரியில் காபி குடித்தீங்களா” என்று மறவாமல் ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டார்.

“ராம்கி அபாரமா புத்தகங்களை தயாரிக்கிறார். ஆது சாதரண விஷயம் இல்லமா...நிறைய கடின உழைப்பு தேவை....ராம்கி மனிதருள் ஒரு மாணிக்கம்....நான் அவரை புகழுனும்னு இதை சொல்ல்லே...அவரது திறமை எனக்கு நல்லா தெரியும்..எதற்கும் கவலைப்படாதீங்க...நேரம் வரும்போது கட்டயாம் அவருக்கு உதவி செய்வேன்” என்று சீதாவிற்கு தைரியம் கொடுத்தர்ர் டாக்டர் அவர்கள். அதிக நேரம் அவருக்கு தொல்லை தரக்கூடாது என்ற நோக்கத்தில் எங்களுக்காக நேரம் ஒதுக்கியதற்கும், தங்களது அறிவுரைகளுக்கும் “ரொம்ப நன்றி” என்று நான் தெரிவிக்கும் முன், “எல்லாம் நல்லபடியா முடியும் ராம்கி, I am with you” என்று தன் மேசை டிராவில் இருந்து திருப்பதி தேவஸ்தாக டைரியை எழுந்து நின்று அன்புபோடு கொடுத்தார்.

“சார் வாங்க உங்களை நமஸ்கரிக்கிறோம்” என்று நாங்கள் இருவரும் எழுந்திருக்க, “இருங்க நாம மூணு பேருமா பெரியவாளை நமஸ்கரிப்போம்” என்று காஞ்சி மகாபெரியவரின் படத்தை காட்டி எங்களோடு அவரும் நமஸ்காரம் செய்தார். பிறகு நாங்கள் இருவரும் திரும்பி அவரது காலில் விழுந்து நமஸ்கரித்தோம். தெய்வத்தை வணங்கியபடியே ஒரு நிமடம் கண்மூடிநின்று எங்களை மனமார ஆசிரிவதித்தார். பிறகு சட் என என் இரு கைகளையும் பிடித்து அவரது தலையில் வைத்துக் சற்றே குனிந்து கொண்டார். “சார்….” என்று நான் படபடக்க, அமைதியான புன்முறுவலுடன், சீதாவின் கைகளையும் பற்றி அவரது தலையில் வைத்துக் கொள்ள நாங்கள் மிகவும் திகைத்து, இத்தனை பெரியவர் இவ்வளவு பணிவாக இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டோம்.

“என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு உண்டு. எப்போது வேண்டுமானாலும் என்னோடு தொடர்பு கொள்ளலாம். பையனை நன்னா படிக்கச்சொல்லுங்கோ” என்று தன் அறை வாசல் வரை வந்து கதவை திறந்து எங்களை வழி அனுப்பினார் டாக்டர் பத்ரிநாத் அவர்கள்.

“சென்று வா மகனே சென்று வா...உலகை வென்றுவா மகனே வென்று வா” எனறு அவர் சொல்வது போல் இருந்தது எனக்கு ...மீண்டும் இருகரம் கூப்பி இருவரும் வணக்கம் தெரிவிக்க, அவரது அறைக்கதவு மெல்ல தானாக முடுகிறது. அப்போது சரியாக மணி 3.30.....

மறவாமல் திரு. செந்தில் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, எனது வி கார்டு ஒன்றை அவரிடம் கொடுத்து கிளம்பினேன்.

மனித நேயம் மிக்க, இமாலய சாதனை புரிந்து, பல்லாயிரம் கோடி மக்களுக்கு கண் ஒளி வழங்கிவரும் டாக்டர் பத்ரிநாத் அவர்கள். என்னைப்போன்ற எளியோருக்கு ஒரு தெய்வமாகவும், மாமனிதராகவும் திகழ்கிறார் என்றால் மிகையாகாது.

என்னே அவரது அன்பு...என்னே அவரது பணிவு....என்னே அவரது கனிவு,,,என்னே அவரது உபசரிப்பு, என்னே அவரது சேவை.... தொடரட்டும் அவரது சமூகப்பணி...

அந்த 3ம் தேதி, 3 ம்ணி, மற்றும் எங்களுடன் 30 நிமிடங்கள், வாழ்வில் ஒரு மறக்கமுடியாத திருநாள் என்று சொல்லவும் வேண்டுமோ?