Monday, April 30, 2012

மணிப்பா, ராஜம் மன்னியின் 50வது திருமண நாள்

மணிப்பா, ராஜம் மன்னியின் 50வது திருமண நாள்
SRI K.VISWANATHAN & SMT. RAJAM'S 50TH WEDDING DAY CELEBRATIONS AT CHENNAI
      எல்லோரும் வந்தாச்சா, நாங்க ரெடி - அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது...

என் பெரியப்பா மகன் மணியண்ணா எனும் மணிப்பா மற்றும் ராஜம் மன்னியின் 50வது திருமண நாள் விருந்து சென்னை நியு உட்லேன்ட்ஸ் ஓட்டலில் 29ம் ஏப்ரல் 2012 அன்று மிகச்சிறப்பாக நடந்தது.


 ஒரிரு நாட்களுக்கு முன்பு மணிப்பா எங்களை இவ்விருந்துக்கு போனில் அழைத்தார். 29ம் தேதி காலை 6 மணிக்கு கோவையிலிருந்து சென்னைக்கு வந்தேன். சுமார் 9 மணிக்கு நானும் சீதாவும் ஒரு வாடகை கார் எடுத்துக்கொண்டு முதலில் பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றோம். பின் அங்கிருந்து கபாலீஸ்வரர் கோவிலுக்கும் சென்றோம். கோவிலில் 50வது மணநாள்காணும் தம்பதிகளுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தோம். பின் சுமார் 12 மணிக்கு நியு உட்லேன்ட்ஸ் ஓட்டலுக்குள் நுழைந்தோம்.


Seetha, Rajam Manni, Manippa & Kumar
(Photo: Sridhar)

மணிப்பாவின் இரண்டாவது மகன் ஸ்ரீதர் மற்றும் மனைவியைப் பார்த்தபின், மணிப்பா மற்றும் ராஜம் மன்னியை சந்தித்து வாழ்த்து கூறினோம்.  அப்போது சுடச்சுட 'சுப்' கொடுக்கப்பட்டது. முரளியின் மனைவி நித்யா எங்களை வரவேற்றாள்.



HOUSE FULL!!

அந்த அறை முழுவதும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எங்கும் உறவினர்களின் கூட்டம். பாலன் அண்ணா,  ராதை மன்னி, அவர்களது மகள் விஜி,  மாப்பிள்ளை மற்றும் பேரனை பார்த்தோம். சந்திரன் அண்ணா தன் துணைவி ரஞ்ஜனியுடன் வந்திருந்தார். இளம் தாத்தா பாட்டிகளான ரவி, கீதா ரவி, ராஜா ரவி,  மகள் ரேகா மற்றும் அவளது மகளையும் பார்த்தோம். விஜி, சீதா, ரேகா, கீதா போன்றவர்கள் தமாஷாக பேசிக்கொண்டிருந்தார்கள். கீதாவை சீதா வலுகட்டாயமாக பக்கத்து இருக்கைக்கு மாற்றி இளம் அழகிகளோடு போட்டோவுக்கு போஸ் கொடுக்க, கீதா செல்லமாக கோபித்தாள்.

LADIES SPL  - கீதா ரவி, விஜி (பாலப்பா மகள்), சீதா, ரேகா (ரவியின் மகள்)


 மேடையில் மணிப்பாவும், ராஜம் மன்னியும் தங்கள் அருக்கையில் அமர ஒருவர் பின் ஒருவராக அவர்களுக்கு நினைவுப்பரிசு கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தோம். அப்போது ஜெயமணி மன்னி 'என்ட்ரி' கொடுக்க வரிசையாக அனைவரும் எழுந்து நின்று வரவேற்றோம். இவரை தொடர்ந்து இவரது மகள் உஷா (தன் கணவருடன்), குமாரின் மகன் என வந்தனர்.  உஷா சீதாவுடன் சிறிது நேரம் பேசிய பிறகு கடைசியாக, 'நீங்க மைதிலிதானே?' என்று கேட்க, சீதா (கடுப்பாகி)  'மரியாதையா அந்தப்பக்கம் போயிடு' என்று செல்லமாக கோபித்துக்கொண்டாள். சீதா சந்தோஷமா அனைவருடன் பேசி மகிழ்ந்தாள். 'இளம் அம்மா' ரேகா,'என்றும் அழகி' கீதா, நடிகை சுஹாசினி சாயலில் விஜி, 'உயிர் உள்ளவரை உஷா'வுடன் சிறிது நேரம் தமாஷாக நானும் சீதாவும் பேசி மகிழ்ந்தோம்


                   MADE FOR EACH OTHER !!
பிறகு திருமணநாள் காணும் தம்பதிகள் மாற்றிக்கொள்ள  மாலை கொடுக்கப்பட்டது. அப்போது மணிப்பா, தானாக மாலையை தன் கழுத்தில் போட்டுக்கொள்ள, 'அண்ணாவுக்கு என்ன அவசரம்?' என்று தமாஷ் செய்தார்கள். பிறகு, ராஜம் மன்னி, அண்ணாவுக்கு மாலையிட, அண்ணா மன்னிக்கு மாலையிட கைத்தட்டல் பலமானது.


மாலை போடவா? வாங்கோண்ணா...வாங்கோண்ணா

                                     நன்னா பிடிச்சுக்கோ..கட்..கட்

பிறகு, இத்தம்பதிகள் கேக் வெட்டி தங்கள் 50வது திருமண நாளை கொண்டாடினர். சுமார் 20 கேமிராக்கள் அப்போது மின்னியது. மணிப்பா, மன்னிக்கு கேக் ஊட்டி விட்டார். பிறகு மன்னி, மணிப்பாவுக்கு கேக் ஊட்ட, அண்ணா பெரிதாக வாய் திறந்தார். பலத்த கைதட்டலோடு கேக் வெட்டப்பட்டது.


                                    கேக் ஊட்டியாச்சு அதுக்குள்ள...

 வந்தவர்கள் அனவைருக்கும் இத்தம்பதியர் தங்கள் 4 போட்டோக்கள் பதித்த கப்புகளை அழகான சுறுக்குப்பையில் போட்டு நினைவுப் பரிசாக கொடுத்தனர். அதில் நிறைய சாக்லேட்கள் இருந்தன.  அறைமுழுவதும் உறவினர்களின் கூட்டம் வழிந்தது.  முரளி அமெரிக்காவில். அன்னம்,   செல்லா, திருமதி சுவாமி மற்றும் கணேசன் குடும்பத்தினர்கள் மிஸ்ஸிங். பங்கஜம் அக்காவின் கணவரையும் நினைவுகூர்ந்து பார்த்து பேசினேன். திரு கல்யாணம் அவர்களையும் சந்தித்தேன். நீண்ட வருடங்களுக்குப்பிறகு திருமதி மற்றும் திரு அனந்தகிருஷ்ணனை சந்தித்தேன். எனக்கு திருமணம் ஆனபோது இவர்கள் நெல்லையில் இருந்தார்கள், ராதை மன்னியின் அழைப்பை ஏற்று, என் திருமணத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.



                                  LINED UP -  அனந்த கிருஷ்ணன்,  இரண்டாவதாக பாலப்பா,                பங்கஜத்தின்   ஆத்துக்கார், சந்திரன்,  திருமதி ரஞ்ஜனி சந்திரன்,   கீதா ரவி

அதற்குள் சாப்பாடு தாயாராகிவிட்டது.  பந்திக்கு முந்துங்கோ என குரல் கொடுக்க, சுடச்சுட சாப்பாடு சாப்பிட்டுவிட்டு விடைபெற்றோம். நாங்கள் சென்றமைக்கு அண்ணாவும் மன்னியும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். ராதைமன்னி 'குமார் அடிக்கடி போன் செய்து எங்களோடு பேசுவான்' என்று கூறி மகிழ, 'இவா எங்க ஆத்துப்பக்கம் போனா எங்களை பாக்காம போகமாட்டாடி' என்று ராஜம் மன்னி சொல்லி மகிழ்ந்தார்கள். ஸ்ரீராமை ஏன் அழைத்துவரவில்லை என பலர் கேட்டனர்.
பாலண்ணா மற்றும் சந்திரன் அண்ணா அவர்கள் எனது வேலையைப்பற்றி விசாரித்தார். திருமதி நித்யா முரளியுடன் சிறிது நேரம் பேசியபின் அனைவரிடமும் பிரியாவிடைபெற்று அவசரமாக கிளம்ப ஆரம்பித்தோம். நிறைய உறவினர்கள் பலர் இருந்ததும் அறிமுகம் கிடைக்கவில்லை. ராஜம் மன்னியின் சகோதரி அவரைப்போலவே இருந்ததால் விஜியிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.


பிறகு மாலை மணிப்பாவுக்கு மீண்டும் போனில் நான்  நன்றி தெரிவிக்க, 'நீங்க வந்ததுக்கு  நாங்க தானே உங்களுக்கு நன்றி சொல்லனும்' என்று அண்ணா சொன்னார். 'நீயும் சீதாவும்  வந்ததுது ரொம்ப சந்தோஷம் குமார்' என்று  மன்னி சொல்லிய பிறகு மறவாமல், ' நீ கொடுத்த அஷ்டலட்சுமியும் நல்லாயிருக்குப்பா' என்றார். அப்போது ஸ்ரீராம் மன்னிக்கு போனில் வாழ்த்து தெரிவித்தான். ஏப்ரல் 29ம் தேதி ஒரு மறக்க முடியாத நாளாக மணிப்பா, ராஜம்மன்னிக்கு மட்டுமின்றி எங்களுக்கும், புரசைவாக்கம் குடும்பத்தார் பலரை ஒரே இடத்தில்   சந்தித்து மகிழ்ந்தது ஒரு 'திருநாளாக' இருந்தது.

மீண்டும் மணிப்பாவுக்கும் ராஜம் மன்னிக்கும் எங்கள் கே ஆர் குடும்பத்தார் சார்பாக வாழ்த்துக்களும் நன்றிகளும்
Spl thanks to Murali, Nitya Murali (Organizer of the event), Sridhar & Mrs. Sridhar for everything.
என்றும் அன்புடன் குமார்.

Saturday, April 14, 2012

RAMKI'S CARTOONS ON EGGS


ராம்கியின் கார்ட்டூன்கள் கோழிமுட்டையின் மீது
ராம்கி (கே ஆர். ராமகிருஷ்ணன்)

கார்ட்டூன்கள் கவலையைத்தீர்க்கும் ஒரு வலிநிவாரணி போன்றது என்று ஒரு முறை திரு ஏபிஜே கலாம் கார்ட்டூன்கள் பற்றி பேசியதை தமிழில் மொழிபெயர்த்து அதை அவருக்கே அனுப்பிவைத்தேன். அவர் பார்த்து ரசித்து ஆல் தி பெஸ்ட் என்று இஆட்டோகிராப் செய்து அனுப்பிவைத்தார்.




சமீப காலமாக என் ஓய்வு நேரத்தில் நான் கார்ட்டூன் வரைவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றேன்.


பள்ளி பருவத்தில் எனது சகோதரர் திரு. கே ஆர் விஜயராகவன் அவர்கள் பேனாவால் ஒருசிறு கோடுகளால் ஓவியங்கள் வரைவதை பார்த்து, எனக்கும் படங்கள் வரைய ஆர்வமானது. பின் ஒரு சில படங்களை வரைந்தது நினைவு உள்ளது. அதில் நான் வரைந்த ஆஞ்சநேயர் ஓவியம் நன்றாக இருந்ததாக என் உறவினர்கள் சொன்னார்கள். சென்னை சந்தமாமா, மங்கை பத்திரிக்கையில் இருந்த போது தினத்தந்தி பேப்பரில் அவ்வப்போது சிரிப்பு பகுதியில் எனது கார்ட்டூன்கள் ஒருசில வெளியாகியது. என் மதிய நேர சாப்பாட்டு வேலையில் நான் வரைந்த சில கார்ட்டூன்களை சந்தமாமாவில் புகழ்பெற்று விளங்கிய தலைமை ஓவியர் திரு. சங்கர் அவர்களிடம் அடிக்கடி காட்டி எவ்வாறு உள்ளது என கருத்து கேட்பேன். ரொம்ப நல்லா பண்ணுயிருக்கேங்க..இன்னும் நிறைய ஓவியங்கள் தொடர்ந்து வரையுங்க...என்று பாராட்டுவார்.



வனிதா எனும் தெலுங்குப் பத்திரிகையில் ஒரு நாள் ஓவியர் வராததால் கார்ட்டூன் வரைய எனக்கு திரு நரசு என்பவர் வாய்ப்பு கொடுத்தார். அதை சாப்பாட்டு இடைவேலையில் முடித்துக்கொடுத்தேன். மங்கையர் மலரில் ஒரு கட்டுரை எழுதி அனுப்பும்போது அதன் ஓரத்தில் ஒரு சில கார்ட்டூன்களை வரைந்து அனுப்பினேன். அட என்ன ஆச்சர்யம், அக்கட்டுரையோடு எனது கார்ட்டூன்களும் வெளியாகியிருந்தது என் ஊக்கத்தை அதிகமாக்கியது.



மும்பையில் 6 வருடங்கள் வேலைபார்த்தேன். அப்போது ஒரு நாள் தேனா வங்கியில் பணம் எடுக்கச் சென்றிருந்தேன். சற்று நேரமாகவே எனக்கு போர் அடித்தது. அதனால் கையில் செக்புக் போட்டு கொண்டுபோயிருந்த வெள்ளை கவரின் மீது ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன். அந்த கிறுக்கல் கார்ட்டூன்களாக இருந்ததை பார்த்து பக்கத்தில் இருந்த ஒரு இந்திக்காரர் அதை வாங்கி அப்படங்களை தன்னுடன் வந்தவர்களுக்கு காட்டி பகுத் அச்சாஹே என்று பாராட்டி கைகுலுக்கினார்.

மும்பையிலிருந்து வெளிவரும் பிரபல மும்மை தமிழ்டைம்ஸ் தினசரியில் எனது சிரிப்பு மற்றும் கார்ட்டூன்கள் வெளிவந்துள்து. இப்படி படிப்படியாக கார்ட்டூன்வரைவதில் ஆர்வம் அதிகமானது. தினமலர் வாரமலர் மற்றும் ஆனந்த விகடனில் எனது சிரிப்புகள் வெளிவந்துள்ளன.


எனது கார்ட்டூன்களை மிகப்பிரபல கார்ட்டூனிஸ்ட்களான திரு. திரயம்பக் ஷர்மா மற்றும் மும்பையை சேர்ந்த விவேக் போன்றவர்கள் பார்த்து பாராட்டி மேலும் வரைய ஊக்கமளித்தார்கள். அகில இந்திய கண் மருத்துவர்கள் சங்க மாநாட்டு அப்ஸ்ட்ராக்ட் புக்கில் எனது சேர்மென் டாக்டர் ராமமூர்த்தி அவர்கள் மாநாட்டின் போது போன் பேசுவது கூடாது போன்ற ஒரு கார்ட்டூன் தேவை என்றும், அப்புத்தகம் பிரிண்ட் செய்யும் அதிகாரியிடம் யாராவது கார்ட்டூனிஸிட் இருக்கிறார்களா என்று கேளுங்க என்று என்னிடம் கூறினார். சரி என்று அவரிடம் கேட்க, தற்போது கோவையில் எனக்கு தெரியந்தவர்கள் யாரும் இல்லை என கூறினார். இருப்பினும் எனது ஆர்வம் காரணமாக நானே ஒரு சில கார்ட்டூன்களை வரைந்து என் சேர்மெனிடம் காட்டினேன். அடி நீங்க கார்ட்டூனும் போடுவீங்களா... நல்லா வந்திருக்கே இதையே நம்ப புக்கில் போடலாம் என்று உற்சாகமளித்தார். புத்தகத்தில் வெளியானதும் பலர் என் படத்தை பார்த்து பாராட்டினர்.



அடுத்த ஒரு முறை என் சேர்மென் ஒரு மாநாட்டில் கண் மருத்துவத்தில் தமாஷ் (Humour in Ophthalmology) என்ற தலைப்பில் பேச அவருக்கு அழைப்பு வர, உடனே எனை அழைத்து எனக்கு கார்ட்டூன்கள் வரைய வாய்ப்பு அளித்தார். அப்போது, கார்ட்டூனில் சம்பந்தப்பட்டவர்களின் தலைப் பகுதியை மட்டும் போட்டோவாக வாங்கி, உடல் பாகத்தை கார்ட்டூனாக வரைந்தேன். அவர் த எனது கார்ட்டூன்களை பெரிய ஸ்கிரீனில் போட்டு பேசினார். பலரும் பார்த்து கைதட்டி சிரித்து மகிழ்ந்தனர். பலர் எனது கார்ட்டூன்களை பார்த்து என்னை வெகுவாக அம்மாநாட்டில் பாராட்டினர். முன்னால் தலைவர் டாக்டர் பாபு அவர்களும் எனது கார்ட்டூன் திறமையை பாராட்டி இமெயில் அனுப்பினார்.





ரயிலில் கோவைக்கும் சென்னைக்கும் அவ்வப்போது தனியே செல்லவேண்டியிருக்கும். அப்போது இரவு 9 முதல் 10.30 வரை மிகவும் போர் அடிக்கும். அதனால் எப்போதும் ஒரு நோட்டுபுத்தகமும், 3 கருப்பு ஸ்கெச் பேனாக்களையும் எடுத்துச்செல்வேன். போர் அடித்தால் உடனே ரயிலில் படம் வரைய ஆரம்பித்துவிடுவேன். சக பயணிகள் என் படத்தை பார்த்து பாராட்டுவார்கள். சார் நீங்க கார்ட்டுனிஸ்டா....நீங்க ஓவிய ஆசிரியரா என்று எல்லாம் கேட்பார்கள். அட இல்லைங்க போரடிக்காம இருக்க வரைஞ்சுகிட்டுவரேன் என்றதும், சார் ரொம்ப நல்லா வரையரீங்க...புத்தகங்களுக்கு அனுப்பலாமே என்பார்கள்.


ஒரு முறை வட மாநிலத்திலிருந்து ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது ஒரு சமபயணி நான்வரையும் படத்தை பார்த்து, சார் என்னையும் வரைஞ்சுகொடுங்க என்றார். எப்படியோ ஒருவழியாக அவரைப்போலவே வரைந்து கொடுத்தேன். மிகவும் மகிழ்ந்தார். சார் ரயிலைவிட்டு இறங்குவதற்கு முன் நீங்க வரைஞ்ச அனைத்து படங்களையும் எனக்கு கொடுங்க சார். என் மகனிடம் கொடுத்து இதைப்பார்த்து அவனையும் வரையச் சொல்கிறேன் என்று வாங்கி சென்றார். வெளியே ஏதாவது போர்டையும் பேனாவையும் பார்த்தா என் கைகள் வரையத்துடிக்கும். எங்கள் மருத்துவமனையில் தினமும் ஒரு பாஸிடிவ் திங்கிங் தகவலுடன் அதற்கு ஏற்ற கார்ட்டூனையும் வரைந்து சிலசமயங்களில் தமிழாக்கமும் செய்து தகவல்பலகையில் போடுவேன். பலர் இதைப்பார்த்து, படித்து, இதன் நகல் எனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்கி எடுத்துச்சென்றுள்ளார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சி தரும் தகவல்.






கோவை தேனா வங்கிக்கு எனது கார்ட்டூன்களை போட்டுக்கொடுத்தேன். வங்கி மேனேஜர் வெகுவாக பாராட்டியதோடில்லாமல் பல இடங்களில் மாட்டியுள்ளார்.


கார்ட்டூன்கள் கோழிமுட்டையின் மீது எப்படி இருக்கு, இன்னும் நிறைய வரைய பயிற்சி எடுக்க வேண்டும் நான் என்பது தெரிகிறதல்லவா?
ராம்கி