Saturday, December 12, 2009

நான் சந்தித்த நட்சத்திரங்கள்



நான் சந்தித்த நட்சத்திரங்கள் / பிரமுகர்கள்




PORUR ராம்கி

நான் சிறிய பாலகனாக இருந்தபோது வடபழனில் பெருமாள் கோவில் தெரிருவில் பல ஆண்டுகள் வசித்தோம், எனது நெருங்கிய உறவினர் மறைந்த ராமகிருஷ்ணன் (கிருஷ்ணமூர்த்தி) அவர்கள் வாகினி ஸ்டூடியோவில் மேனேஜராக வேலைபார்த்து வந்தார். எங்களது அடுத்த சுவர் விஜயா கார்டன். மிகவும் உயரமாக இருக்கும். அங்கு அடிக்கடி படபிடிப்பு நடக்கும். பக்கத்துவீட்டு டெல்லி ராசு என்பரின் வீட்டு மாடிக்கு சென்றால் விஜயா கார்டனில் நடக்கும் படபிடிப்பு நன்றாக தெரியும்... போட்ட வரிகளையே பலமுறை போட்டு படம் பிடிப்பதை பார்த்து சில சமயம் போர் அடித்துவிடும். அப்படி பார்த்த படபிடிப்பில் மறக்க முடியாதது எங்கே அவள்...என்றே மனம் என்ற பாடல் காட்சி. அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்தனர். இதுபோன்ற இரவு பகலாக படபிடிப்பை பார்ப்போம், அது போல நல்ல நேரம் பாடல் காட்சியில் எம்ஜிஆர் மற்றும் பல யாணைகளுடன் நாள்கணக்கில் படமாக்கப்பட்டதையும் மாடியில் இருந்து ரசித்தோம். சில சமயம் நாங்கள் நிற்பது கேமராவில் விழும் என்பதால் எங்களை அந்தப்பக்கம் போகச்சொல்லி அங்கிருந்து கையசைப்பார்கள். விசில் ஊதுவார்கள். சில நாட்கள் பாடல் சப்தத்தால் நிம்மதியாக துஙககூட முடியாது. மறக்க முடியாத அனுபவம், சென்னை வரும் விருந்தினர்கள் எங்கள் வீட்டுக்கு வராமல் போகமாட்டார்கள். காரணம் பாசம் மட்டும் அல்ல, இங்கே வந்தால் ஏதாவது படபிடிப்பில் நடிகர்களை பார்க்கலாமே என்ற எண்ணத்திலும் கூட.........



விஜயா வாகினி ஸ்டூடியோவிற்கு அவ்வப்போது செல்வோம், ஒரு முறை நான் சென்ற சமயம் எம்ஜிஆர் அவர்கள் நடிக்கும் நம்நாடு படபிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. அப்போது தளத்தில் விளக்குகள் மாட்டியிருக்கும் மிகவும் உயரமான இடத்திலிருந்து எம்ஜிஆர் அவர்களை பார்க்க அனுமதி கொடுத்தார்கள். எங்களது உறவினர் அங்கு வேலை செய்வதால் எல்லா தளத்திற்கு செல்வோம். யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். கட். ஸ்டார்ட் போன்ற வார்த்தைகள் எங்கள் காதில் விழாத நாட்கள் இல்லை எனலாம். ஒவ்வாரு மாதமும் முதல் நாள் (சம்பள நாள்)அன்று ராமகிருஷ்ணன் அவர்கள் வடபழனி கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து பிறகுதான் சம்பளத்திலிருந்து பணத்தை செலவுக்கு எடுப்பார், அதனால் மாதம் முதல் நாள் மாலை 4மணிக்கே வாகினி ஸ்டூடியோவிற்கு சென்று எல்லா தளங்களுக்கும் ஒரு ரவுட் கட்டி வருவோம், பிறகு அவருடன் வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து திரும்புவோம். ஒரு முறை ஸ்டூடியோவிற்கு சென்ற போது நடிகை கே. ஆர். விஜயா மற்றும் தேங்காய் சீனிவாசன் ஒர் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள், எங்களைப் பார்த்ததும் வீட்டிலே சொல்லிட்டு தானே இங்கே வந்திருக்கீங்க என்று கே. ஆர். விஜயா கேட்டார். ஆமாம் என்றோம். அவர் பேசியதால் எங்களுக்கு ஒரே குஷி,,,,,, துள்ளி குதித்து அதை எல்லோரிடம் சொல்லி மகிழ்ந்ததை நினைத்தால் சிரிப்பு வருகிறது,

குலதெய்வம் ராஜகோபால் எங்கள் வீட்டிற்கு அருகாமையில் தான் இருந்தார். அடிக்கடி அவரை பார்ப்போம், அவரது மகன்கள் எனது பள்ளி நண்பர்கள், அதில் ஒருவர் தீ விபத்தில் இறந்துவிட்டான். அது போன்று மறைந்த இயக்குநர் ஜம்புலிங்கம் அவர்களும் நல்ல பழக்கம். அவரது மகன் சித்தி தொடர் புகழ் பாஸ்கரும் நானும் ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள். அடிக்கடி அவர்களது வீட்டிற்கு சென்று விளையாடுவோம். டைட்டில் ஜெயராமன் என்பவர் எங்கள் அடுத்த வீட்டில் இருந்தார். அவர் டைட்டில் கார்டுகளை அழகாக கோடு இட்டு எழுதுவதைப்பார்த்து பார்த்து நானும் எழுதும்போது எழுத்துக்களை பிரித்து அழகாக எழுத ஆரம்பித்தேன். என்னை குமரு என்று செல்லமாக அழைப்பார். அவரது மகள் துளசி கேமரா வுமனாக பயிற்சி பெற்றாள்.

அதுபோன்று வசந்த மாளிகை படபிடிப்புக்காக கண்ணாடியால் ஒரு பெரிய அரண்மனை வாகி்னி ஸ்டூடியோவில் கட்டப்பட்டது. எனது மூத்த சகோதரர் மணி அவர்கள் தான் அப்படத்திற்கு நிர்வாக அதிகாரியாக இருந்தார். அதனால் உள்ளே நாங்கள் செல்ல அனுமதி எளிதாக கிடைத்தது,. அந்த படத்தை இந்தியில் தயாரிக்கும்போது ராஜேஷ்கண்ணாவை சந்தித்தேன். வெறும் ஹாய் என்றவாறு கைகொடுத்தார். நிறைய படங்கள் படம் வெளிவரும் முன்பே ஸ்டூடியோவில் பார்த்துவிடுவோம்.

சிவாஜி அவர்களை சந்திக்க வாய்ப்பும் கிடைத்தது. கே. ஆர். விஜயா கார்டனில் அவரை சந்திக்க பொம்மை ஆசிரியர் திரு. வீரபத்திரன் என்னையும் அழைத்துச்சென்றார். என்னை அறிமுகப்படுத்தியதும் வாங்க உட்காருங்க என்று கை கொடுத்தார் சிவாஜி அவர்கள். எனக்கு இருக்கை கொண்டு வரச்சொல்லி அவர் அருகே அமரச்செய்தார். எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது அவ்வப்போது படபிடிப்புக்கு செல்லும் சிவாஜிகணேசன் அவர்கள் சில காட்சிகளுக்கு நடுகே கண்மூடி தன் நாற்காலியில் அமர்ந்துவிடுவார். கண்களை அப்படியே மூடியபடி இருக்க ஒருவர் அவரது நெற்றிப்பொட்டை மெல்ல மெல்ல அமுக்கி கொடுப்பதை பார்த்தேன். அண்ணே ஷாட் ரெடி என்று ஒரு முறை இயக்குநர் சொன்னதும், அடுத்து வினாடி துடித்து எழுந்து கண்ணாடி முன் தன் முகத்தை பார்த்துவிட்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார். நான் சென்ற சமயம் ஒரே காட்சியை பல முறை இயக்குர் முக்தா சீனிவாசன் எடுத்துக்கொண்டிருக்க, எரிச்சல் அடைந்த சிவாஜி அவர்கள், எடுத்து தொலைங்கடா என்று கோபமாக முனுமுனுத்ததை பார்த்தேன். பிறகு மதியம் வீட்டிற்கு செல்ல கார் ரெடியானதும் என்னிடம் அப்பறமா பார்க்கலாம் என்று கை கொடுத்து விடைபெற்றார். அதே படத்தில் அவரது மகன் நடிகர் பிரபுவும் நடித்துக்கொண்டு இருந்தார், பிரபுவிடமும் என்னை திரு வீரபத்திரன் அறிமுகப்படுத்தினார். அப்பா போயாச்சா என்று கேட்டுக்கொண்டே சிகரட்டை பற்றவைத்தார் பிரபு. விடைபெறும் போது நாளைக்கு அப்பாவோட எங்க வீட்டிலே போட்டோ செஷன் இருக்கு, நீங்களும் வீரபத்திரன் சார் கூட வாங்க என்று அன்போடு அழைத்தார்,. ஆனால் என்னால் செல்லமுடியவில்லை.

கமலஹாசன் அவர்களை அவரது எல்டாம்ஸ் ரோடு இல்லத்தில் பத்திரிகையாளர் விஜயன் மற்றும் மேஜர் தாசன் என்பவருடன் சந்தித்தேன். வணக்கம் என்று கைகொடுத்தார். அதிக கூட்டமாக இருந்ததால் அதிகம் பேசமுடியவில்லை. அடுத்து சந்தமாமா கட்டிடத்தில் கமல் அவர்களின் நம்மவர் படபிடிப்பு தொடர்ந்து பலநாட்கள் நடந்தது, அப்போது அவருடன் மீண்டும் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது, ஒரு முறை அவரது மனைவி சரிகாவும் படபிடிப்பை காண வந்திருந்தார்,


விஜயன் மற்றும் மேஜர் தாசனுடன் நிழல்கள் ரவியை சைதாப்பேட்டையில் உள்ள அவரது அறையில் சந்தித்தோம். அவர் தனது படபிடிப்பு அனுபவங்களை விஜயனிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். அப்போது ஒரு ஊரில் படபிடிப்புக்கு சென்ற போது அந்த ஓட்டலில் வேலையும் செய்யும் பெண்மணி தன்னுடன் அன்று இரவு இன்பமாக கழிக்க சொன்னதை விவரமாக சொல்லிக்கொண்டிருந்தார். என்னிடம் பேசும் போது உங்களை எங்கேயோ பார்த்தா மாதிரி இருக்கே.. சிகரெட் எடுத்துக்கோங்க என்ற நீட்டினார். நான் புகைப்பதில்லை என்றது ஓ நல்ல ஹேபிட், என்றார்.

நடிகர் சிவக்குமார் அவர்களை எனது நண்பரின் திருமண வரவேற்பில் சந்தித்தேன், பிறகு பல வருடங்கள் கழித்து ஒரு முறை குமுதம் நிருபர் மேஜர் தாசனுடன் வாகினிக்கு நடிகர் சிவக்குமார் அவர்களை பார்க்க சென்றேன், படபிடிப்பு முடிந்ததும் காரில் ஏறச்சென்ற சிவக்குமார் அவர்களிடம் அண்ணே குமுதம் வீ்க்லியிலிருந்து மேஜர் வந்திருக்கார் என்று சொல்ல மேஜர் அவர்களிடம் சிவக்குமார் கைகொடுத்த அடுத்த நிமிடத்தி்ல் மிகவும் டென்ஷன் ஆகி ஓரே கூப்பாடு போட்டார். என்னய்யா குமுதம் நடத்தராங்க...அவ வயசுக்கு வந்தட்டா இவ வயசுக்கு வந்துட்டான்னு என சம்பந்தம் இல்லாமல் கத்த ஆரம்பித்தார். இத்தனை நேரம் அனைவரோடும் சிரித்து பேசிக்கொண்டிருந்த சிவக்குமாரா இவர், என்று ஆச்சயர்யமாக பார்த்தார்கள், சரிண்ணே நீ்ங்க வீட்டுக்கு இப்ப கிளம்புங்க என்று ஒருவர் சமாதனப்படுத்தி காரின் கதவை திறக்க கோபத்தோடு காரில் ஏறி சிவக்குமார் பயணம் ஆனார், என்னுடன் வந்த மேஜர் உட்பட அனைவரும் சிவக்குமாரின் புரியாத கோபத்தை கண்டு வியந்து என்ன ஆக்சோ இவருக்கு தெரியலயே என்று நகர்ந்தனர். எனக்கும் மேஜர் அவர்களுக்கும் ஒன்றும் ஓடவில்லை,


நிறைய நட்சத்திரங்கள் எங்கள் பொம்மை அலுவலகத்திற்கு வருவார்கள், அப்படி சந்தித்தவர்கள் பலர் குறிப்பாக தேங்காய் சீனிவாசன், ஜீவிதா, வாணிஸ்ரீ, ஜெய்சங்கர் போன்ற ஏராளமானோர்.

ரஜினி அவர்களை பலமுறை படபிடிப்புகளில் சந்தித்துள்ளேன்., திரு. வீரபத்திரன் அவர்கள் எப்போதும் அனைத்து நட்சத்திரங்களின் தொடர்பில் இருப்பார். பொம்மை பத்திரிகையின் ஆசிரியர் ஆயிற்றே....வெளியே கிளம்பும்போது அண்ணே ரஜினியை பார்க்க ஏவிஎம் போறேன் வாரேங்களா என்பார்....அடுத்த நாள் மாலை இன்னைக்கு சில்க் சுமிதாகிட்டே பேட்டி, வரீங்களா உடனே கிளம்புங்க என்பார், சிலசமயம் ஆசையாக இருந்தாலும் அலுவலக வேலை காரணமாக என்னால் அடிக்கடி செல்லமுடியாது,

ஒரு முறை ரஜினி அவர்கள் திரு நாகிரெட்டி அவர்களை விஜயா கார்டனில் சந்தித்து பேசியது பரபரப்பாகப் பேசப்பட்டது, அவ்வப்போது முன்பெல்லாம் ரஜினி விஜயா ஹெல்த் சென்டரில் ஓய்வு எடுக்க வந்துவிடுவார். இருப்பினும் எங்கள் பொம்மை அலுவலகத்தில் உழைப்பாளி படபிடிப்புக்கு முன் திரு விஸ்வநாத ரெட்டி அவர்களை சந்திக்க ரஜினி வந்தார், என் இருக்கையை தாண்டி ஒரு புன் முறுவலுடன் உள்ளே சென்றார். வெளியே வந்ததும் கையசைத்தபடி சென்றார், உழைப்பாளி படபிடிப்பு ஆரம்பமானதும் அடிக்கடி தொடர்ந்து ரஜினி அவர்கள் எங்கள் அலுவலகத்திற்கு வந்தார், திரு வீரபத்திரன் அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். உடனே இவரை பார்த்திருக்கேனே என்று கையை கொடுத்தார். என் சக ஊழியர்கள் அவருடன் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

வாகினி படதளத்தில் ஒரு நாள் ரஜனி, சௌந்தர்யா பாடல் காட்சி படமாக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. அதைபார்த்துக் கொண்டிருந்தேன்,. பிறகு ரஜினி கிளம்பும் போது தன் அருகே இருந்த சௌந்தர்யாவின் கண்ணத்தில் ஒரு இச் கொடுத்துவிட்டு நகர்ந்தார். பொதுமக்களும் நடனகுழுவினர்கள் பலர் ரஜினி இப்படி பொது இடத்தில் சௌந்தர்யாவிற்கு முத்தம் கொடுத்ததை பார்த்து அதிர்ந்தனர். நான் கூடத் தான்.

மலையாள நடிகர் மம்மூட்டியையும் அறிமுகப்படுத்தினார் திரு வீரபத்திரன் அவர்கள். என்ன சிம்பிளான மனிதர் மம்மூட்டி, எங்களை அமர வைத்து பிளாக் டீ கொடுக்கச்சொன்னார், படபிடிப்புக்கு நடுவே எங்களிடம் நீண்ட நேரம் பேசினார். நான் இவ்வளவு படம்தமிழல் நடித்தும் ரசிகர்கள் என்னை ஒரு கதாநாயகனாக ஏத்துக்கொள்ளவி்ல்லயே என ஏங்கினார். எங்களை அடுத்த நாள் அவரது இல்லத்திற்கு அழைத்தார்.

நடிகை குட்டி பத்மினியையும் பேட்டி கண்டேன். நன்றாக சகஜமாக பேசினார். நான் சென்ற சமயம், அவரது டிவி படபிடிப்பு நடந்து கொண்டிருந்ததால் அவர் வர சற்று நேரமானது, அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு ஜாலியாக பதில் அளித்தார். நடவே தனது உதவியாளரிடம் ஏதோ இந்தியில் பேசினார். நான் கிளம்பும் போது, ஒரு சின்ன கவரை கொடுத்து என்னோட ஸ்மால் கிப்ட் என்றார்.

நடிகை லைலாவை மும்பையில் டாக்டர் நடராஜன் அவர்கள் அறிமுகப்படுத்தினார். நான் வெல்கம் டு மும்பை என்று சொன்ன போது ஐயோ நான் மும்பைகாரி தாங்க என்று குலுங்கி குலுங்கி சிரித்தார், அவரை எனது இஷ்டத்திற்கு புகைப்படம் எடுத்து தள்ளினேன். அவரது சந்திப்பை குங்குமம் இதழில் எழுதினேன் அதையும் அவருக்கு அனுப்பிவைத்தேன். பிறகு சந்தித்தபோது ரொம் தேங்ஸ் நல்லா ஆர்ட்டிகள் வந்திருந்தது என்று கைகுலுக்கினார்.

நீண்ட ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீதேவியை பார்த்தேன். டாக்டர் நடராஜன் அவர்களிடம் தன் கண் பிரச்சனைக்காக வந்திருந்தார், தமிழில் பேசினாலும் வயதாகிவிட்டதால் அவரது கிளாமர் குறைந்து காணப்பட்டார்.

அனுபம் கிர், ஷபினா அஸ்மி மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்றவர்களை டாக்டர் நடராஜன் அவர்கள் எனக்கு மும்பையில் அறிமுகப்படுத்தினார். ஐஸ்வர்யா ராயை இரண்டு மூன்று முறை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது, ஹாய் என்றதோடு சரி....அவரின் அப்பா கிருஷ்ணா ராய் நல்ல நண்பராகிவிட்டார், எங்கு பார்த்தாலும் ஹாய் ராம்கி என்று பெயர் சொல்லி அழைப்பார். அடிக்கடி டாக்டர் நடராஜன் அவர்களை பார்க்க வரும்போது நீண்ட நேரம் என்னுடன் பேசிக்கொண்டு இருப்பார். ஐஸ்வர்யாராய் பற்றி குங்குமம் அல்லது குமுதம் இதழில் தொடர் எழுத விரும்பமாக இருக்கிறேன் என்றபோது கட்டாயம் ஒரு நாள் அதுக்காக உட்காரலாம் என்றார். ஆனால் நான் மும்பையை விட்டு வரும் வரை முடியாமல் போனது.

மும்பைக்கு வந்திருந்த சரோஜா தேவியின் பேட்டியை குங்குமம் வார இதழில் எழுதினேன்.

மும்பைக்கு வந்த நடிகர் விஜயகாந்த் அவர்களை திரு எம் கருண் அவர்கள் எனக்கு அறிமுகப்படுத்தினார். வணக்கம் என்று சொல்லி கைகொடுத்தார்.

டாக்டர் நடராஜன் அவர்களுக்கு நடிகை ரேவதி கையால் ஒரு டிவி நிகழ்ச்சிக்காக சாதனையாளர் விருது மும்பையில் வழங்கப்பட இருந்த போது, அன்று டாக்டரால் வர இயலவில்லை,. ஆகவே என்னை அனுப்பி அந்த விருதினை அவரது சார்பாக வாங்கச்சொன்னார். அப்போது மேடையில் ரேவதியை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது,

நடிகர் விசு அவர்களை உழைப்பாளி படபிடிப்பில் சந்தித்தேன். இப்போதும் நாங்கள் இமெயில் மூலம் தொடர்து தொடர்பில் இருக்கிறோம்.

கவுண்ட மணியை ஒரு படபிடிப்பில் பார்த்தேன். தன் முகத்தை கர்ச்சீப்பால் மூடிக்கொண்டு யாருக்கும் அடையாளம் தெரியமல் இருக்கும்படியாக அமர்ந்து இருந்தார், நான் அவரை அடையாளம் கண்டுகொண்டதை அறிந்த அவரே ஹவ் ஆர்யு பிரதர் என்று கைகொடுத்து மீண்டும் முகத்தை மூடிக்கொண்டார். எனக்கு அவரது செய்கை சிரிப்பாக இருந்தது.

எம்எஸ்விஸ்வநாதன் ராமமூர்த்தி, மற்றும் பாடகர் பாலசுப்ரமணியம், மனோ, பாடகர் ஹரிஷ், (எனது வீட்டிறகு வந்துள்ளார்) எல். ஆர். ஈஸ்வரி, கங்கை அமரன், சுனியர் பாலைய்யா, ரேவதி, சரத்குமார், உதய் குமார், சம்பத் செல்வன், ராமா நாயுடு, போன்றவர்கைளயும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, பல இசையப்பாளர்களையும் கவிஞர்களையும் பேட்டி கண்டு பல இதழ்களில் எழுதியுள்ளேன். பட தயாரிப்பாளர் திரு ஏவிஎம் சரவணன் அவர்களை பற்றி ஒரு சின்ன கட்டுரை கு்ங்குமம் இதழில் எழுதினேன். அதை நேரே அவரிடம் ஏவிஎம்ஸ்டூடியோவில் சந்தித்து கொடுத்தேன். மிகவும் மகிழ்ந்தார். பாடகர் டிஎம்எஸ் அவர்களுடன் போனில் பேசியுள்ளேன்.

மறைந்த படதயாரிப்பாளர் நாகிரெட்டி அவர்களையும் பலமுறை சந்தித்துள்ளேன். ஒரு முறை சென்ற போது எனது தோள்களில் கைபோட்டு ஸ்டைலாக பேசிக்கொண்டு இருந்தார். ஒரிரு முறை போன் செய்து விஜயா கார்டனுக்கு வரச்சொன்னார். அவரது மகன் படதயாரிப்பாள் திரு பாப்ஜி மற்றும் பாரதி ரெட்டியும் நல்ல பழக்கும் உண்டு.

இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் (விஜய் அவர்களின் அப்பா) அவர்களை அவரது வீட்டில் சந்தித்தேன், அப்போது விஜய் இல்லை.

மும்பை படவினியோகஸ்தர் திரு. நம்பி ராஜன் நல்ல நண்பர். மும்பையில் அரோரா தியேட்டர் நடத்தி வரும், இவருக்கு தமிழ் மற்றும் இந்தி திரைப்பட உலகில் அனைவரையும் பழக்கம், இவர் மிகவும் பிரபலமானவர் கூட, ராஜஸ்தான் படத்தை தயாரித்தது மட்டுமல்லாமல் அதில் சிறப்பாக நடித்தும் இருக்கிறார் திரு, நம்பி ராஜன்.

டாக்டர் நடராஜன் மூலமாக சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் ஜீவிதா போன்றவர்களோடு போனில் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. இவர்கள் டாக்டர் நடராஜனுடன் மருத்துவம் ஒன்றாக படித்தவர்கள்,

மறக்க முடியாத அனுபவம், பொம்மை, சந்தமாமா அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது ஒரு ஞாயிறு அன்று வேலைக்கு செல்ல என் அறையில் தெலுங்கு படபிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஆஹா எனது இருக்கையில் நடிகை ஸ்ரீதேவி அம்ர்ந்து டைப் அடிப்பது போன்ற காட்சி படமாக்கினார்கள்....படமாக்கும் போது தப்பும்தவறுமாக எதைஎதையோ அடித்து நடித்தார். ஒரு சில நிமிடங்கள் கழித்து அப்படத்தில் சேர்மனாக நடிக்கும் நடிகர் சோபன் பாபு தன் அறைக்கு உள்ளே செல்வது போலவும் அவர் செல்லும் போது ஊழியர்கள் எழுந்து நின்று குட் மார்னிங் சார் சொல்வது போன்ற காட்சிக்கு என்னையே நடிக்கவைத்தார்கள்... ஒரே குஷியாக இருந்தது, ஒரு மணிநேரத்தி்ற்கு ஒரு முறை காபி, பழச்சாறு மற்றும் நொறுக்குதீனி கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அன்று வெகு அருகே ஸ்ரீதேவியின் அழகை கண்குளிர கண்டு ரசித்தேன். நான் வேகமாக டைப் செய்வதை ஸ்ரீதேவி அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்கள் பத்திரி்கையில் பெண்விடுதலை பற்றி எழுதியிருந்தேன். பாரதி ராஜா அவர்கள் தனது புதுமைப்பெண் படத்தில் அது சம்பந்தமாக கட்டுரைகளை ஒவ்வொன்றாக வருவதுபோல காட்சி எடுத்திருந்தார். அதில் எனது பெண்விடுதலை கட்டுரையும் படம்பிடித்து காட்டினார்.


அண்மையில் சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் பயணம் செய்யும் போது நடிகரும் இயக்குநருமான திரு. சேரன் அவர்கள் அதே விமானத்தில் பயணித்தார். பறக்கும் விமானத்தில் அவரோடு எனது விசிட்டிங் கார்டில் சிறு செய்தி எழுதி அவரிடம் கொடுத்தேன். மிக்க நன்றி என்று வாங்கிக்கொண்டார். ஒன்றாக விமானத்தில் இருந்து இறங்கி நடந்துவந்தபோது அவரிடம் உங்கள் நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது என்று பாராட்டினேன்,. சந்தோசம் என்று கைகொடுத்து பிறகு பார்க்கலாம் என்றார்.

No comments:

Post a Comment